BREAKING NEWS

Jan 6, 2013

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இலங்கை அணி படுதோல்வி

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட் இந்த டெஸ்ட் தொடரை 2- 0 என இலங்கை அணி ஏற்கனவே இழந்து விட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 03- ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமான்னே 91 ஓட்டங்களையும் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 72 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பேர்ட் 4விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் 3விக்கெட்டுக்களையும் சிடல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்தநிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 432 ஓட்டங்களைக் குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மத்தேயு வேட் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் டேவிட் வோனர் 85 ஓட்டங்களையும், பிலிப் ஹக்ஸ் 87 ஓட்டங்களையும் விலாசினர்.

138 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்7 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தினேஸ் சந்திமால் 22 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 7 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் களத்தில் துடுப்பெடுத்தாடினர்.

இந்தநிலையில் நான்காம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி 278 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை அணிசார்பில் திமுத் கருணாரட்ன 85 ஓட்டங்களையும், மஹெல ஜயவர்த்தன 60 ஓட்டங்களையும் விலாசினர்.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையோடு ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறியனர்.

இதன்படி 141 என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 42.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியிலக்கைக் கடந்தது.

இதன்படி மூன்றுபோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3 – 0 என வசப்படுத்தியுள்ளது.

தொடரின் சிறப்பாட்டக்காரராக மைகல் கிலார்க் தெரிவு செய்யப்பட்டதோடு, போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜாக்ஸன் பேட் தெரிவானார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &