பால்மா தொடர்பான சகல விளம்பரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பால்மா தொடர்பான தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் வானொலி விளம்பரங்கள் இடைநிறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பால்மா தொடர்பான சில விளம்பரங்கள் பாவனையாளர்களை தவறாக வழிநடத்துவதால்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.ஜீ.மஹிபால அறிவித்துள்ளார்.
அதேநேரம், தேய்காய் எண்ணெயை மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியும் எனத் தெரிவித்து வெளியிடப் படும் விளம்பரங்களும் பிழையானவை என அறிவித்துள்ள சுகாதார அமைச்சு, இவ்வாறான விளம்பரங்கள் பாவனையாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு தொடர்பான ஆலோசனைக் குழு இத்தீர்மானங்களை எடுத்திருப்பதாக டொக்டர் மஹிபால தெரிவித்தார். மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான உணவு விளம்பரங்கள் குறித்து அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், இதன் அடிப்படையில் இக்குழு விரிவாக ஆராய்ந்து இவ்வாறான விளம்பரங்களை நிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சகல பால்மா தொடர்பான விளம்பரங்களையும் மீளாய்வு செய்வதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதுவரை சகல பால்மா தொடர்பான விளம்பரங்களும் எந்தவொரு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு சகல பால்மா உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, சில வகையான தேங்காய் எண்ணெய் விளம்பரங்கள் குறித்தும் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் டொக்டர் மஹிபால, இது குறித்தும் சுகா தார அமைச்சின் உணவு தொடர்பான ஆலோசனைக்குழுவின் நிபுணர்கள் ஆராய்ந்ததாகத் தெரிவித்தார்.
தேங்காய் எண்ணெய்களை மீள்பயன் பாட்டுக்கு உட்படுத்தலாம் எனத் தெரிவிக்கும் விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல என்பது உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடாகும். அவை பாவனையாளர்களை தவறாக வழிநடத்துவது மட்டுமன்றி தவறான கருத்துணர்வைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும்.
எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் தொடர்பான விளம்பரங்களின் போது இவ்விடயம் குறித்து கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.