பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிக் காலத்தில் பலர் அரசியல் பழிவாங்கள்களுக்கு இலக்கானதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1994 தொடக்கம் 2012ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கள்களுக்கு உட்பட்டவர்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அது தொடர்பில் தமது கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது வரை ராஜபக்ஷ அரசாங்கம் உயர்ந்த மட்டத்தில் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது என இதன்போது ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இவ்வாறான அரசியல் பழிவாங்கள்களுக்கு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி அரசாங்கக் கட்சியிலுள்ள அவர்களுக்கு எதிரான குழுவினரும் இலக்காகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ராஜபக்ஷவின் ஆட்சி மிருகத்தனமானது இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.