
By: Inamullah Masihudeen
"இஸ்லாமிய சமூக மையங்களான மஸ்ஜிதுகளும் குத்பா பேருரைகளும்" என்ற ஒரு எண்ணக்கரு அல்லது தலைப்பு கொண்டுள்ள சமூக வாழ்வின் தத்துவங்கள் சமகாலத்தில் புதிதாக ஆராயப்பட விடயம் என்பதனை விட அமுலுக்கு வர வேண்டிய அம்சம் என்பதே உண்மையாகும்.
வாரத்தில் ஒவ்வொரு வெள்ளியும் எமது தொழில்கள், வியாபாரங்கள்,கொடுக்கல் வாங்கல்கள் என சகலதையும் நிறுத்திவிட்டு ஜும்மாவுக்காக மஸ்ஜிதுக்கு வருமாறு முஸ்லிம் சமூகம் வேண்டப்படுகிறது.
அன்றைய தினம் குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து உள்ளும் புறமும் தூய்மையானவர்களாக ஒரு ஆன்மீக சூழலில் ஒன்று கூடல்களுக்காகவும், குத்பா உரையை வாய் மூடி மௌனமாய் இருந்து கேட்பதற்காகவும் நாம் அழைக்கப்படுகின்றோம்.
ஒவ்வொரு வாரமும் இவ்வாறு கண்டிப்பாக அழைக்கப்பட்டு ஒரு சமூகத்திற்கு இவ்வுலக மறு உலக ஈடேற்றத்திற்கான, சமுதாய சீர்திருத்தங்களுக்கான, மானிட விமோசனத்திற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்களை கள நிலவரங்களின் நிலைக்களனில் வழங்குகின்ற உத்தியோகபூர்வமான மேடைகளாகவே மிம்பர் மேடைகள் கருதப்படுகின்றன.
இன்றைய இஸ்லாமிய சிந்தனை முகாம்கள் மிம்பர் மேடைகளை விட்டு தூரமாக இருப்பதுவும், மிம்பர் மேடைகள் உரிய தராதரங்களை கொண்டிருக்காமையும், ஒட்டு மொத்த சமூகமும் அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும், வெறும் ஆசார தர்மங்களுக்காக ஜும்மா தினங்களை கடத்திக் கொண்டிருப்பதுவும் எல்லா மட்டங்களிலும்,எல்லா துறைகளிலும் முஸ்லிம் சமூகத்தில் பாதகமான தாக்கங்களை கொண்டிருக்கின்றன.
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அந்த அறை மணித்தியால கால இடைவெளியில் இஸ்தம்பிக்கச் செய்து வழங்கப்படுகின்ற சனசமூக சன்மார்க்க போதனைகள் அறிவு பூர்வமாகவும், ஆய்வுபூர்வமாகவும், ஆன்மீக அடித்தளங்களில் சமயோசிதமாக சமூக விவகாரங்களை கையாளுகின்ற தராதரங்களை பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினதும்,இஸ்லாமிய தஃவா அமைப்புக்களினதும் கவனம் இந்த விவகாரத்தில் பெரிதும் ஈர்க்கப்பட வேண்டியுள்ளது, சிறந்த குத்பாக்களை நடாத்துவதற்கான பயிற்சிகளும் ஆங்காங்கே அவ்வப்போது இடம் பெற்றாலும் அவை நன்கு திட்டமிடப்பட்ட தொடர்ந்தேர்ச்சியிலான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இடம் பெற வேண்டிய தேவை இருக்கிறது.
சமூகத்தில் கற்றவர்கள் அறிந்தவர்கள் ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர் சமூகத்திற்கு அவசியம் எனக் கருதும் விவகாரங்களை குத்பா பேருரை நிகழ்த்தும் இமாம்களின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு சிறந்த குத்பா பேருரைகளை, ஆய்வுகளை காணுமிடத்து அவற்றை இமாம்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும்,முடியுமானவர்கள் குத்பாக்களை தயாரிப்பதில் அவர்களுக்கு உதவுவதன் மூலமும் அளப்பரிய சேவையொன்ற செய்யலாம். இன்ஷா அல்லாஹ்.
ஜும்மாஹ் முபாறக்..!