நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனின் செயலால் கோபமடைந்த தீவிராவாதிகள் இன்று அந்நாட்டின் துணை பிரதமரின் மனைவியை கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் எல்லையை தாண்டி கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரமான கொலொபத்தாவில் நுழைந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் துணை பிரதமர் அமாதாவ் அலியை தாக்கியுள்ளனர். பின்னர் அவரது மனைவியை கடத்திச்சென்றனர். அவர் மட்டுமல்லாது அந்நகரின் மேயராக உள்ள செய்னி பவ்கர் லாமெய்ன்னையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.
தனது குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட வந்த துணை பிரதமரை தாக்கிய தீவிரவாதிகள், அவரது மனைவியை கடத்தும் போது மூன்று பேரை கொன்றதாக கேமரூன் நாட்டின் ராணுவ தலைவர் ஒருவர் தெரிவித்தார். அங்கு நெருக்கடியான நிலைமை காணப்படுவதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.