BREAKING NEWS

Jun 27, 2014

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகள் : ACJU

புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவைக் கொண்ட மாதமே புனித ரமழான் மாதமாகும். இதில் அல்லாஹ் அல்-குர்ஆனை இறக்கிவைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.

இப்புனித மாதம் எம்மை முன்னோக்குகின்றது. துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் நீங்கவும் நம் சமூகத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டிருப்போருக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகள் பின்வருமாறு :

01. நேரத்தை வீணாக்குவதை தவிர்ந்து இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல்.

02. அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.

03. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.

04. இப்தார் நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக செய்தவதைத் தவிர்த்து அச்சந்தர்ப்பத்தில் அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபடல். மேலும் ஏழைகளுக்கு உதவும் விடயத்தில் அதிகம் கவனமெடுத்தல்.

05. இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுவதையும் வீணாக சுற்றித் திரிவதையும் இளைஞர்கள் முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.

06. இரவுநேர வணக்கங்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கிகளின் சப்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.

07. ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்;த்தாதிருத்தல்.

08. உங்கள் வீடுகளில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு கொடுத்தல் போன்ற சகவாழ்வைக் கட்டியெழுப்பும் விடயங்களில் ஈடுபடுதல்.

09. பெண்கள் கடைத் தெருக்களில்  சுற்றித் திரிவதை தவிர்ந்துக் கொள்ளல். அத்துடன் பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது உரிய பாதுகாப்புடன் செல்லல். மேலும் கால நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பெண்கள் தமது தொழுகைகளை வீடுகளில் நிறைவேற்ற முன்னுரிமைக் கொடுத்தல்.

10. மஸ்ஜிதுகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.

11. பள்ளிவாசல்களில் கூடும் மக்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ளல்.

12. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.

இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம்சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

 

 

அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &