BREAKING NEWS

Jun 26, 2014

புலனாய்வு அதிகாரிகள் தொடர்பில் மங்கள சமரவீர

அளுத்கம சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வுப் பிரிவின் மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் தகவல்களை வெளியிடும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்து, 6 மணித்தியாலங்களில் மங்கள சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மற்றும் அதன் இணைப்பதிகாரி ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு உதவி வருவதாகவும் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் குறித்து நாட்டுக்கு தகவல்களை வெளியிடக் கூடாது என்றாலும் அரச புலனாய்வுப் பிரிவிற்குள் இருந்து கொண்டு, பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற அமைப்புகளுக்கு உதவி செய்து, நாட்டிற்குள் இனவாத தீயை ஏற்படுத்த முயற்சிக்கும் சகல புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டியது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் தனது கடமை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அளுத்கம சம்பவத்தின் பின்னர், கைது செய்யப்பட்ட 13 சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்வதற்காக இந்த அதிகாரிகள் அழுத்தங்களை கொடுத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.-TW
புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள்
அதேவேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருவதாக பொதுபல சேனாவின் சிரேஸ்ட உறுப்பினர் திலான் ஜயசிங்க தெரிவித்துள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகிறது
மங்கள சமரவீரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அதேவேளை தேசிய பாதுகாப்பு மற்றும் அரச ரகசியங்களை முறைகேடாக விமர்சனம் செய்த சம்பவம் தொடர்பில் ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &