BREAKING NEWS

Jun 26, 2014

கோத்தா உள்ளே! அஸ்வர் வெளியே : அரசாங்கம் திட்டம்

தேசியப் பட்டியல் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிர்வாக சேவை பதவியி்ல் இருந்து கொண்டு அரசியல் விடயங்களில் தலையிடுவது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தன்னை செயலாளர் (லேகம்துமா) என்று அழைக்காமல் ஸேர் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் போடும் நிபந்தனை அமைச்சர்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமித்து, அதிகாரம் மிக்க அமைச்சர் அல்லது பிரதமர் பதவியைக் கையளிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனையடுத்து தற்போது தேசியப் பட்டியல் நியமன உறுப்பினரான அஸ்வர் ஹாஜியாரை தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு பதவி விலகிய பின் அவருக்கு மேல் மாகாணம் அல்லது வடமேல் அல்லது வடக்கு மாகாண ஆளுனர் பதவியை அளிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அஸ்வர் ஹாஜியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் பௌசி இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் முதலாவது பதவிக் காலத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினரான அன்வர் இஸ்மாயிலின் வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்ஷவை நியமித்த விடயம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போன்று தற்போது இன்னோர் முஸ்லிம் உறுப்பினரை பதவி விலக்கி, கோத்தபாயவை நியமித்தால் அது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இவ்விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &