இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட வழிகாட்டல் நிகழ்ச்சி:

இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தர்கா நகர், பேருவளை, வெலிப்பன்னைப் பிரதேச மக்களுக்கான சட்ட ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக முஸ்லிம் சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்றை தேசிய ஷூறா சபை கடந்த வெள்ளி (20)கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஷூரா சபையின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் ஸுஹைரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட சுமார் 30 சட்டத்தரணிகளும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் முடிவாக மேற்படி சட்டத்தரணிகள் உள்ளடக்கிய குழு ஒன்று உடனடியாக இனக் கலவரங்கள் நிகழ்ந்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களையும் அப்பிரதேசங்களின் தலைவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.
அந்தவகையில் மறுநாள் சனிக்கிழமை (21) சுமார் 35 சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று தர்காநகருக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகளும் இணைந்துகொண்டனர்.
முதலில் இக்குழு தர்காநகர் தெருவுப்பள்ளி ஜும்மா மஸ்ஜிதில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பிரதிநிதிகள், மஸ்ஜித் நிருவாகிகளைச் சந்தித்தது. அப்போது குறித்த விஜயத்தின் நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் போது பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றி கலந்துரையாடாப்பட்டது.
பின்னர், மேற்படி சட்டத்தரணிகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரிகொடா, சீனவத்த, வெலிபிடிய, வெலிப்பன்னை, பேருவளை ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் முறைப்பாடுகளைப் பொலிஸ் நிலையங்களில் முறையாகப் பதிவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அனுப்பப்பட்டனர்.
அதனடிப்படையில், அளுத்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியைச் சந்தித்த விஷேட சட்டத்தரணிகள் குழு பாதிக்கப்பட மக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விஷேட ஒழுங்குகளைச் செய்தனர். இதன் மூலம் பல முறைப்பாடுகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டதுடன் அனைத்து முறைப்பாடுகளும் சட்டத்தரணிகள் குழுவின் முன்னிலையில் முறையாகப் பதியப்படுவதும் உறுதி செய்யப்பட்டது.
ஏனைய பகுதிகளுக்குச் சென்ற குழுக்கள் மக்களின் சட்டப் பிரச்சினைகளை கேட்டறிந்து, பாதிக்கப்பட்டோரின் முறைப்பாடுகளை முறையாகவும், விரிவாகவும் ஸ்தலத்திலேயே பதிந்து பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்தனர்.
அனைத்து முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் மேற்படி சட்டத்தரணிகள் குழு தேசிய ஷூறா சபையின் வழிகாட்டலில் தொடர்ச்சியாக இப்பிரதேச மக்களுக்கு தமது சேவைகளை வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மேற்படி விஜயத்தின் போது இக்குழுவினால் இனங்காணப்பட்ட அப்பிரதேச பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரி பொலிஸ் மா அதிபரிற்கு கடிதம் ஒன்றை தேசிய ஷூரா சபை இன்று (23) சமர்ப்பித்தது.



