BREAKING NEWS

Jun 12, 2014

தர்காநகரில் ஏற்பட்ட பதட்ட நிலை

தர்காநகரில் பெளத்த மதகுருவொருவர் அச்சுறுத்தப்பட்டும், அவரது சாரதி தாக்கப்பட்டதுமாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்  முஸ்லிம் இளைஞர்கள் மூவர்  கைது செய்யப்பட்டதுடன் அங்கு புத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் குறித்த மதகுருவுக்கும், முஸ்லிம் நபரொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

சந்தேக நபர் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் அவர் தண்டிக்கப்படுவதில் நியாயமிருக்கின்றது எனத் தெரிவிக்கும் அப்பிரதேச முஸ்லிம் பிரமுகர்கள், இது பிற இனத்தவரையோ மதத்தவரையோ நிந்திக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு துறைமுக திட்டமிடல் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வருகை தந்து நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். அத்துடன் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவோம் என இதன்போது பொலிசார் வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, நிலைமை கட்டுப்பாட்டுக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பட உதவி: லங்காதீப

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &