
தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து 'இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்' என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனம் இலேசாவதை உணர்ந்தார். நிம்மதியான தூக்கமும் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து இஸ்லாமியனாக மாறி விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களின் உதவியால் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
தனது பெயரை அப்துல்லாவாக மாற்றியுள்ளதாக கேள்விப்படுகிறேன். 'யுவன் சங்கர் ராஜா' என்ற பெயரிலேயே அவர் இஸ்லாத்தில் தொடரலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் அவர் எந்த சாதி என்று அடுத்த கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் அரபு பெயராக இருந்தால் இந்த கேள்வி எழாது. இதை அனுபவத்தில் பலமுறை நாம் பார்த்திருப்போம். 'அப்துல்லாஹ்' என்ற பெயருக்கு 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். மிக அழகிய பெயர். இறைவனுக்கு பிடித்த இரண்டு பெயர்கள் அப்துல்லா, அப்துல் ரஹ்மான். அந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்த யுவனை வாழ்த்தி வரவேற்போம்.
தனது டிவிட்டர் தளத்தில் யுவன் கொடுத்துள்ள சில செய்திகள் கீழே!
My family supports my decision and there is no misunderstanding between me and my dad.
I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah!
Without you,I'm nothing. I love you all for supporting me all though my life. Nandri endra oru varthai pathadhu. May god bless you all.
I don't hate nobody,after all we are humans n we breathe the same air.
I know God is with me.
I don't believe in awards and rewards.I believe in being righteous and doing my work properly,rest is up to GOD.
எல்லா புகழும் இறைவனுக்கே!
குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு மேலே உள்ள யுவனின் ட்விட்டர் செய்திகளே சாட்சி!
இசையை பொருத்த வரையில் இஸ்லாத்தில் கூடுமா? கூடாதா? என்று அறிஞர்களிடத்தில் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. சவுதியிலும் அறிஞர்களிடையே 'இசை நம்மை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டுப்பாட்டோடு அனுமதிக்கும் அறிஞர்களும் உண்டு.
குடி, சூது, வட்டி, விபசாரம், திருட்டு, புறம் பேசுதல், கொலை, பொய் என்று பல தவறுகளை பட்டியலிடும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. முகமது நபியின் சில ஹதீதுகள் இசையை தடுக்கச் சொல்லி வருகின்றன. மற்றும் சில ஹதீதுகள் இசையை அங்கீகரித்து வந்துள்ளன. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்த வகையில் இசையே கதி என்று கிடக்காமல் அதற்கு அடிமையாகி விடாமல் நமது சந்தோஷமான நாட்களில் பாடல்களை கேட்பது ஆகுமாக்கப்பட்டதாகவே எண்ணுகிறேன். இறைவனே உண்மையை அறிந்தவன்.
புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த யுவன் வழமை போலவே எல்லா மதத்தவரையும், இனத்தவரையும் அதே அன்போடு அணுக வேண்டும். உலக மக்கள் யாவருமே ஆதமுடைய மக்களே! எல்லோரையும் படைத்தது அந்த ஏக இறைவன் ஒருவனே!வெறுப்பை நீக்கி அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த செய்தியைத்தான் இஸ்லாமும் உங்களுக்கு சொல்கிறது. வருங்காலங்களில் இசையில் ஆபாசம் இல்லாமல் மக்களை தவறுகளிலிருந்து விலக்கி விடும் சக்தியாக உங்கள் இசை இருக்க வேண்டும். ஏ ஆர் ரஹ்மானைப் போல் உலக புகழ் பெற வேண்டும். தமிழனுக்கும், இந்தியனுக்கும், உலக மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.
'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!
முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!
உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'
-குர்ஆன் 110: 1,2,3
உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு யுவனின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.