தெற்கு அதிவேக வீதியின் இதுவரை திறக்கப்படாத மாத்தறை பின்னதுவ பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த வெளிநாட்டு தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னதுவ நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடையை அகற்றிவிட்டு, கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த வெளிநாட்டு தம்பதியினருக்கு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர்களுக்கு மோட்டார் சைக்கிளை வழங்கிய, மோட்டார் சைக்கிள் உரிமையாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு அதிவே வீதியின் களனிகம பகுதியில் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிவேக வீதியின் பாதுகாப்பு கடவைக்கு மேலாக குறித்த சைக்கிளை சந்தேகநபர் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.