இலங்கை எனது இரண்டாவது வீடாகும் என இலங்கையிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவுள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா தெரிவித்தார்.
நான்கு வருடங்களுக்கான தூதுவர் நியமனத்துடன் இலங்கைக்கு முதன் முதலில் நான் வந்தபோது எப்படி ஒரு வருடத்தை கழிப்பேன் என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார். எனினும் சுமார் ஒன்பது வருடங்களை மிகவும் சந்தோசமாக இங்கு நான் கழித்துவிட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பலஸ்தீன தூதுவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்றை பலஸ்தீன் நட்புறவு ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய தூதுவர்,
"இன்று இலங்கை இரண்டாவது வீடாக மாறியுள்ளது. இதனை நினைத்து நான் மிக்க சந்தோசஷமடைகின்றேன். இந்த நினைவுகளை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. நாட்டின் பல பாகங்களுக்கு நான் விஜயம் மேற்கொண்டுள்ளேன்.
கடந்த எட்டு வருட எனது பதவிக் காலத்தின் போது இலங்கை மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடன் மாத்திரமன்றி அனைத்து சமூகத்தினருடனும் சமனான முறையில் நான் உறவுகளை பேணி வந்துள்ளேன்.
இதற்கு மேலதிகமாக அமைச்சர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் என பல்வேறு தரப்பினருடன் சிறந்த உறவுகளை நான் பேணி வந்துள்ளேன். இதன் ஊடாக இரு நாடுகளின் உறவினை மேம்படுத்த மிக இலகுவாக இருந்தது. தற்போது பலஸ்தீன் மக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தினால் பல்வேறு துன்பங்ளை அனுபவித்து வருகின்றனர்.
எனினும் பலஸ்தீனர்களுக்கு ஒரு நாள் விடுதலை கிடைக்கும் என இன்னும் நம்புகின்றோம். ஆனால் நாளுக்கு நாள் பலஸ்தீனர்களுக்கான சோதனை இஸ்ரேலிய அரசாங்கத்தினால் அதிகரித்தே வருகின்றது" என்றார்.
இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,
"கடந்த எட்டு வருட சேவையின் போது இலங்கை மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவினை பலப்படுத்துவதற்காக தூதுவர் அன்வர் அல் அஹா கடுமையாக உழைத்தார்.இவரின் சேவை எமக்கு தொடர வேண்டும். இளம் தூதுவராக இருந்து பல சேவைகளை மேற்கொண்டதுடன் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளின் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் என அனைவரும் சிறந்த முறையில் உறவினை பேணி வந்தார்" என்றார்.