ஏசி போட்டுக் கொண்டு நிறுத்தியிருக்கும் காரில் நீண்ட நேரம் தூங்கும்போது விஷ வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே காரை பயன்படுத்துவதில்லை.
சிலருக்கு பொழுதுபோக்கு இடமாகவும், சிலருக்கு மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்வதற்கும், இன்னும் சிலருக்கு அலுவலக இடைவேளையில் ஒரு குட்டித் தூக்கம் போடும் ஓய்வறையாகவும் கார்கள் பயன்படுகிறது. நீண்ட தூரம் செல்லும்போது களைப்பை போக்கிக் கொள்ள காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு விட்டு செல்வோரும் இருக்கின்றனர்.
இதில் என்ன வியப்பு இருக்கிறது என்கிறீர்களா? வாருங்கள்.
- ஏசியை ஆன்செய்துவிட்டு காருக்குள் தூங்கும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- மூடியிருக்கும் காருக்குள் ஏசி மெஷினிலிருந்து சில சமயம் கார்பன் மோனாக்சைடு வாயு கசிந்து பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
- ஆக்சிஜனுக்கு பதில் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் அதிக அளவில் கலக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அது மயக்க நிலையை ஏற்படுத்தி உயிருக்கு உலை வைக்க அதிக வாய்ப்புகள் உளஅளது.
- கார்பன் மோனாக்சைடு ஒரு மணமற்ற வாயு. எனவே, அது காருக்குள் பரவுவதை நம்மால் உணர இயலாது. சிலர் கார் கண்ணாடிகளை திறந்துவைத்துவிட்டு தூங்கினால் இதனை தவிர்க்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால், இது முழு பலன் தராது என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- நிறுத்தியிருக்கும் காருக்குள் கண்ணாடிகளை மூடிவிட்டு நீண்ட நேரம் தூங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
- ஏசியில் கசிவுகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்து கொள்ள வேண்டும். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏசியை முழுமையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் ஏசி மெக்கானிக்குகள்.
- குறிப்பாக, மூடிய காருக்குள் குழந்தைகளை தனியாக விடுவதையும், தூங்க வைப்பதையும் தவிருங்கள்.