BREAKING NEWS

Oct 8, 2013

அதிவேக தபால் சேவை நாளை முதல்

நவீனமயப்படுத்தப்பட்ட அதிவேக தபால் சேவை நாளை முதல் புதியதொரு பரிமாணத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படும் புதிய அதிவேக தபால் சேவை நவம்பர் முதலாம் திகதி முதல் வழமைபோன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது அதிவேக தபால் சேவைகளுக்கு பாரிய கேள்வி நிலவுவதாக தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல தனியார் நிறுவனங்கள் பொதிகள் சேவை என்ற பெயரில், பொருட்களை மிகவும் துரிதமாக விநியோகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இந்த சேவையை செயற்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதேசங்களை வேறுபடுத்தி, நகரங்களுக்குள் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குள்ளும், நகரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் 4 மணித்தியாலங்களுக்குள்ளும் தபால் விநியோகத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிவேக தபால் சேவையை மிகவும் துரிதமாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &