BREAKING NEWS

Oct 13, 2013

நான் பாகிஸ்தான் பிரதமர் ஆக வேண்டும் : மலாலா

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய வசதியாக பாகிஸ்தானின் பிரதமராக விரும்புகிறேன், என சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசஃப்ஸாய் (16)  கடந்த ஆண்டு பயங்கரவாத அமைப்பொன்றால் தாக்கப்பட்டார்.
அதிலிருந்து மீண்டு அனைவருக்கும் கல்வி கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கும் மலாலாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும் அவருக்கு இம்முறை நோபல் பரிசு கிடைக்கவில்லை.
அமெரிக்கவின் சிஎன்என் தொலைக்காட்சி மலாலா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: பாகிஸ்தானின் மறைந்த பெண் பிரதமர் பேநாசீர் பூட்டோ என்னை மிகவும் கவர்ந்தவர். அவரை போல், நானும் பிரதமராகி நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
அப்போதுதான் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க செய்து, அவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் வாய்ப்பு கிடைக்கும். பட்ஜெட்டில் கல்விக்கும் அதிக நிதி ஒதுக்க முடியும். அதேசமயம், நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளிலும் கவனம் செலுத்துவேன்.
தலிபான் அமைப்பினரால் என் உடலைத்தான் சுட முடிந்ததே தவிர, என் கனவுகளை சுட முடியாது. அவர்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். முன்பு, எனக்கு இறப்பு குறித்து பயம் இருந்தது. ஆனால், இப்போது அதுகுறித்து சிறுதுளி பயம்கூட இல்லை. கறுப்போ, வெள்ளை, கிறிஸ்தவரோ, முஸ்லிமோ அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.
என் வயது ரொம்ப சிறியது. கல்விக்காக இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. வருங்காலத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கி அதில் பல குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அனைவருக்கும் உள்ளது. அதுகுறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனினும், எனக்கு இந்த விருதை வழங்கியிருந்தால் அதில் கிடைக்கும் பரிசுத் தொகையை பெண் குழந்தைக் கல்வி விழிப்புணர்வுக்காக பயன்படுத்துவேன். எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதைக் காண வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். அதையேதான் அமைதிக்கும், கல்விக்கும், நல்லிணக்கத்துக்கும் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய விருதாகக் கருதுகிறேன்.
சமீபத்தில் மலாலா எழுதி வெளியிட்ட ‘ஐ ஆம் மலாலா’ என்ற புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாகித்துல்லா ஷாகீத், பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘இஸ்லாம் மதத்துக்கு எதிராக மலாலா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மலாலாவைக் கொல்வதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழக்கவில்லை. அதேபோல், மலாலா எழுதிய புத்தகத்தை விற்பனை செய்வோரையும் நாங்கள் தாக்குவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &