இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகுகளில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற கடற்படை உயரதிகாரி ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்திருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணத்தைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஜுலை மாத நடுப்பகுதியில் அறிவித்திருந்த போதிலும், மூன்று இழுவைப் படகுகளில் பயணம் மேற்கொண்டிருந்த 300 பேரை காவல்துறையினர் இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்திருந்தனர். இவர்களில் 56 பெண்கள் 93 பிள்ளைகள்.
இது தொடர்பில் கடந்த மாதம் நான்கு கடற்படையினர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னர், ஆறு வாரங்களுக்கு முன்னர், படகுப் பயணம் மேற்கொள்வதற்குத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகின்ற 73 பேரை இலங்கை காவல்துறையினர் இலங்கையின் தென்பகுதியில் பிடித்திருந்ததைத் தொடர்ந்து இந்தக் கடற்படை உயரதிகாரி வெள்ளியன்று கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆஸ்திரேலிய பயணத்திற்கான ஆட்கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கடற்படையைச் சேர்ந்த அதிகாரி தரத்திலான ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை என்றும் கூறப்படுகிறது.
லெப்டினன் கமாண்டர் சஞ்சீவ அனத்துகொட என்ற இந்தக் கடற்படை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். இதனை பதில் காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண பிபிசி சந்தேசியவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆட்கடத்தலை ஒரு வியாபாரமாக மேற்கொண்டு வருபவர்கள் தொடர்பாக மாத்தறை காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், கடற்படையினர் எந்ததெந்த நேரங்களில் நடமாடுவார்கள், எங்கெங்கு நிலைகொண்டிருப்பார்கள் என்பது பற்றிய தகவல்கள் இந்த அதிகாரி மூலமாக ஆட்கடத்தல் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது தமதுதுறையினர் விசாரணைகளின்போது, தெரியவந்திருப்பாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்துகின்ற வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற 14 பேரை மாத்தறை காவல்துறையினர் இது வரையில் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. விசாரணை முடிவில் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பதில் காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இத்தகைய ஆட்கடத்தல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் சட்டவிரோதப் பயணம் மேற்கொள்கின்ற மீன்பிடி படகுகளைக் கண்டுபிடிப்பது தொடர்பில் இலங்கைக் கடற்படையினருக்கு ஆஸ்திரேலியா தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது. எனினும் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், பயணி ஒருவரிடம், இந்த உயிராபத்துமிக்க 3 வார கால கடற்பயணத்திற்கு எட்டு தொடக்கம் ஒன்பது லட்சம் வரையில் பணம் அறவிடப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. சிலர் விமானம் மூலமாக இந்தோனேசியாவுக்குச் சென்று அங்கிருந்து படகுகளில் பணம் மேற்கொள்வதையும் அதிகாரிகள் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துகின்ற கும்பலின் தலைவர் ஒருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், அக்ரம் என்ற பெயருடைய இலங்கையர் ஒருவரையும் கைது செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.