தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் 'ஸ்லீப்பர் செல்கள்' (மக்களோடு மக்களாக இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பிரிவினர்) பதுங்கியிருப்பது உண்மையே என்று தமிழக மாநில கியூ பிரிவு பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து தமிழகத்துக்கு இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற மர்ம தொலைபேசி அழைப்பொன்றில், தமிழகத்துக்குள் 32 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கடலோர பகுதிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தைத் தாக்கக் கூடிய பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுடன் கூடிய ஸ்லீப்பர் செல்கள் இலங்கையில் பதுங்கியிருப்பது உண்மைதான் என்று தமிழக கியூ பிரிவு பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும் அவர்களால் உடனே தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றாலும் எதிர்காலத்தில் ஆபத்து இருக்கிறது என்றும் கியூ பிரிவு பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.