(TN)லோகோஸ் ஹோப் (லோகோஸ் நம்பிக்கை) என்ற பெயரிலான உலகிலுள்ள கப்பல் ஒன்றில் நடைபெறும் மிகப்பெரிய புத்தகக்கண்காட்சி கொழும்பு துறைமுகத்தில் இம்மாதம் 30ம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 22ம் திகதி வரை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்காக நங்கூரமிடப்படவுள்ளது.
இந்தக் கப்பலில் உள்ள புத்தகங்களை வாசிப்பதற்கும், பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் அக்கப்பலில் பணிபுரியும் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 பேருடன் நேரில் சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். விஞ்ஞானம், விளையாட்டு, பொழுதுபோக்கு, குடும்பவாழ்க்கை, சிறுவர் புத்தகங்கள், கல்விமான்களுக்குரிய நூல்கள், அகராதிகள், உலகப் படங்கள் போன்றவை உட்பட பலதரப்பட்ட நூல்கள் இந்தக் கப்பலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு கப்பலில் உள்ள வசதிகள், நூல்கள் பற்றிய குறுந்திரைப்படம் முதலில் காண்பிக்கப்படும். இந்தக் கப்பலில் பார்வையாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிற்றுண்டிச் சாலையும் இருக்கும். கப்பலுக்குள் செல்வதற்கு பிரவேச கட்டணமாக 100 ரூபா. வயது வந்தவர்களுக்கும் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கும் இலவசமான அனுமதியும் கொடுக்கப்படும்.