வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது தொடர்பான தகவலை சற்று முன் சிங்கள ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாiலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது. இதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டன.
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் நீக்கப்படாத நிலையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பு தீவிரமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் அவ்வாறான நிலையில் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்படுவதைத் தடுப்பதாயின் விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களை சமாளிக்கும் பொருட்டு, முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.