அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் வழங்குகின்ற எந்தவொரு உறுதி மொழியும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் நாமும் எமது சமூகத்தை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதனைத் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருக்க முடியாது என்று பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சபையில் தெரிவித்தார்.
பள்ளிகள் மீதான தாக்குதல்களை நடத்துவோர் யார் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தெரிந்திருந்தும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. எனவே, பாதுகாப்புத் தரப்பினர் கண் மூடித்தனமாக இருக்காது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கை மின்சாரம் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்,
அண்மைக்காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் எதிரான சில தீய சக்திகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், பள்ளிவாசல்கள் உடைக்கப்படுதல் போன்ற செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 10 தினங்களாக அதிகரித்திருக்கின்றன.
கிராண்ட்பாஸ், மஹியங்கனை, தெமட்டகொடை, பாலத்துறை, கொலன்னாவ, மாவனெல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் உடைப்பு உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
20 வருடமாக 5 வேளை தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மஹியங்கனை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, அது தற்போது நோன்பு மாதத்தில் மூடப்பட்டிருக்கின்றது.
மாகாண அமைச்சர் ஒருவரே மேற்படி பள்ளிவாசலை மூடுமாறு கூறியிருக்கின்றார். இத்தகைய செயற்பாடானது முஸ்லிம்களை மாத்திரமின்றி ஏனைய சமூகங்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.அத்துடன் எம்மை இச் செயற்பாடு புண்படுத்தியிருக்கின்றது.
இத்தகைய செயற்பாடுகள் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை தீர்த்துவிடாது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இதனையே நாம் விரும்புகின்றோம்.
பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பாதுகாப்பு தரப்பினருக்கு நன்றாகத் தெரியும். எனினும், சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படாதிருப்பது கவலையளிக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொடுத்து படையினருடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றோம். அதேபோன்று மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நாம் அரசாங்கத்துடனும் பாதுகாப்புத் தரப்பினருடனும் பேச்சுகளை நடத்தியிருக்கின்றோம்.
அந்த சந்தர்ப்பங்களில் எமக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் நாமும் எமது சமூகத்தை அமைதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது எமக்கு மிகவும் கவலையளிக்கின்றது.அத்துடன் இதனை நீடித்துக் கொண்டிருக்கவும் முடியாது.
பள்ளிவாசல்கள் தாக்குதல்களை நடத்துகின்றவர்கள் தொடர்பில் பாதுகாப்புத்தரப்பினர் கண் மூடித்தனமாக இருக்காது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.-ஜே.ஜி.ஸ்டீபன் – ப.பன்னீர்செல்வம்-விடிவெள்ளி