“அல்லாப்பிச்சைப் பள்ளிவாயலை சிறி முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அம்மன் கோவிலாக வடிவமைக்க தீர்மானித்துள்ளது”
“யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் ஹலீபா அப்துல் காதர் வீதியை சிறிமுருகன் வீதியாக பெயர் மாற்றம் செய்வதற்கு யாழ் மாநகரசபை அனுமதியளித்துள்ளது”
“யாழ்-ஹதீஜா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தின் காணிகளை வைத்தீஸ்வரா கல்லூரியின் தேவைகளுக்குப் பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது”
அன்பர்களே இத்தகைய அதிர்ச்சிகரமான இன்னும் பல செய்திகளை தாங்கள் வெகுவிரைவில் காண்பீர்கள். இவை எமது சமூகத்தில் உள்ளவர்களாலேயே முன்னெடுக்கவும்படும். இதற்கு கட்டியம் கூறுவதைப்போல யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்று, வெளிமாவட்டங்களில் சொகுசு வாழ்க்கை நடாத்தும் ஒரு சிலரும், வெளிநாடுகளில் தஞ்சம் கோரி அங்கே உலகமே நிரந்தரம் என்று எண்ணும் ஒரு சிலரும் யாழ் முஸ்லிம் மண்ணின் காணிகளை அந்நியருக்கு அதிக விலைக்கு விற்றுவிட முன்வந்துள்ளார்கள். இதன் காரணமாக யாழ் முஸ்லிம் பிரதேசம் அந்நியரின் கைகளுக்கு வெகு இலகுவாக கைமாறிக்கொண்டிருக்கின்றது.
யாழ் முஸ்லிம் மண்ணில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றபோது யாழ் மண்ணில் முஸ்லிம்கள் மீளவும் குடியேற வேண்டும், எமது மண் மீண்டும் ஹயாத்தாக்கப்படவேண்டும் என்று நாம் நாட்டம் கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் அவற்றை மேற்கொள்கின்றோம், ஆனால் இங்கே நடப்பது வேறு விதமாக இருக்கின்றது. எல்லாம் அழகாக ஆகியதன் பின்னால், அதன் மூலம் நிலத்திற்கான பெறுமதி உயர்கின்றது. அந்தப் பெறுமதியில் இலாபம் காண குறுகிய மனம் கொண்ட செய்த்தானின் வழிகாட்டலை ஏற்றுக்கொண்ட ஒரு சிலர் முயல்வது மிகுந்த மனவேதனை தருகின்றது.
வட்டி ஹறாம் என்கின்றோம், விபச்சாரம் ஹறாம் என்கின்றோம், பள்ளிவாயல்களைக் கட்டுவது மிகுந்த நன்மையளிக்கும் செயற்பாடு என்று நம்புகின்றோம், பள்ளிவாயலைக் கட்டுவது சிறப்பானது என்றால் பள்ளிவாயல்களை உடைப்பதும், அவற்றை அந்நியரின் ஆதிக்கத்துக்கு விடுவதும் பாவமானதாகவே இருக்கும், ஒரு தனிமனிதனை கொலை செய்வது பாவம் என்கின்றோம், ஒரு குடும்பத்தை கொல்வது மகா பாவம் என்கின்றோம், அதேபோல ஒரு சமூகத்தை அழிப்பதும் அதற்கு வழி செய்வது மகா பாவங்களே.
எனவே அன்புள்ளம் கொண்டவர்களே, உங்களது அவசர புத்தியினாலும், குறுகிய செயற்பாட்டினாலும், உலகமே நிரந்தரம் என்று எண்ணுவதாலும், அல்லாஹ்வின் மீதும் அவனது தீனின் மீதும் நம்பிக்கையற்றிருப்பதாலும். யாழ் மண்ணின் காணிகளை அந்நியருக்கு விற்றல் என்ற பாதக செயல் தங்களுக்கு ஒரு பொறுட்டேயில்லாத செயலாகிவிட்டது.
நீங்கள் இங்கே மீண்டும் வந்து குடியேற வேண்டாம், அது உங்களுக்கு உகந்ததல்ல, ஆனால் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழும், குடியேறும் உரிமையினை, அங்கே அல்லாஹ்வை நினைவுகூறும் மஸ்ஜித்களின் இயக்கத்தினை தடுத்துவிடாதீர்கள்.
இது அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த உலகில் செய்யும் மகத்தான தார்மீகப் கடமையாக இருக்கும். (JM)
(யாழ்ப்பாணத்திலிருந்து அபூ அப்துல்லாஹ்)