எதிர்கால தொழில்வாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப விஞ்ஞான துறை சார்ந்த புதிய கல்வித் திட்டமொன்று இம்மாதம் 15 ஆம் திகதி அறிமுகம்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை மகளிர் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட நீச்சல் தடாகத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டு நீச்சல் தடாகத்தை திறந்துவைத்தார்.
அமைச்சர் பந்துல குணவர்தன அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் என மூன்று அம்சங்களைக் கொண்டதாக இந்தப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த 1995 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 15 வீதமான மாணவர்களே சித்திடைந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியில் இந்த 49 வீதமாக அதிகரித்துள்ளது.
கல்வித்தறை மாற்றங்களின் போது எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புக் களைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் பாடங்களுக்கே முக்கி யத்துவம் வழங்கப்படுகிறது.
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்படுவதுடன் பல மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் கல்வித்துறை கண்டிருந்த வீழ்ச்சி தற்போது சரிசெய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.