நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வார காலத்துக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் எனது கைதும் தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என இந்த நாட்டு மக்களுக்கும் வெளி உலகுக்கும் எடுத்துச் சொல்வதில் ஊடகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள்,உள்நாட்டு இயக்கங்கள்,மக்கள் பிரதிநிதிகள்,மனித உரிமை அமைப்புக்கள்,சர்வதேச மன்னிப்புச் சபை,மனித உரிமை கண்காணிப்பகம்,அமெரிக்கா அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள்,உள்நாட்டு வெளிநாட்டு இணையத் தளங்கள் என பல்வேறு தரப்பினரும் மகத்தான பங்காற்றியுள்ளனர்.இவர்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தான் அரசாங்கம் என்னை அவசரமாக விடுதலை செய்யவும் காரணமாக அமந்தது என நான் நம்புகின்றேன்.
கனடா,அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அகிய நாடுகளின் பிரதிநிதிகள் என்னை கைது செய்தது தவறு என்றும் ஒன்றில் என்னை விடுதலை செய்ய வேண்டும் அல்லது என் மீது சட்டப்படி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். நான் நிரபராதி என்ற நம்பிக்கையில் அவர்கள் எனக்காக குரல் கொடுத்தமையானது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
உள்நாட்டில் அரச ஊடகங்களைத் தவிர ஏனைய ஊடகங்கள் அனைத்தும் இந்த விடயத்தில் பக்கச்சார்பின்றி கருத்துக்களை முன்வைத்திருந்தன.
சிரச, தெரண, டி.என்.எல்.ஹிரு போன்ற தொலைக்காட்சி சேவைகளின் பங்கு இந்த விடயத்தில் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். இதில் சிரச நிறுவனம் தொடர்ந்து தனது செய்தி அறிக்கையில் எனக்காக ஒரு விஷேட அம்சத்தை இணைத்து எனது கைது சட்டவிரோதமானது என்பதை மக்களுக்கு உணர்த்தும் நடவடிக்கையில் ஈடபட்டதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதற்காக நான் அந்த நிறுவனத்தின் தலைவர் உட்பட சகலருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.
உள்ளுர் செய்திப்பத்திரிகைகளில் சிலோன் டுடே, மவ்பிம, வீரகேசரி, விடிவெள்ளி, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி போன்ற பத்திரிகைகளின் பங்களிப்பை நான் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.அதேபோல் ஜப்னா முஸ்லிம்.கொம் இணையத்தளத்துக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஆசிய பிராந்திய அமைப்பு,மனித உரிமை கண்கானிப்பகம உடபட அரச சார்பற்ற நிறுவனங்கள்,தொண்டு நிறுவனங்கள் என்பனவும் எனக்காக குரல் கொடுத்திருந்தமை எனக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.அதேபோல் அரசாங்கத்தில் இருந்து கொண்டே தமது பதவிகளைக் கூட கருத்திற் கொள்ளாமல் எனக்காக வாதாடியதோடு எனது உடல் நலம் விடுதலை என்பனவற்றில் கூடிய அக்கறை செலுத்திய அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம்,றிஷார்ட் பதியுத்தீன், ராஜித சேனாரத்ன, மற்றும் கொழும்பு மாநகர மேயர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம்.முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய உட்பட சகலருக்கும், மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹுனைஸ் பாரூக், ஹஸன்அலி, ரவி கருணாநாக்க, டொக்டர் ஜயலத் ஜயவர்தன, டிரான் அலஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர் சரத் பொன்சேகா உட்பட சகலருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
எனது விடுதலைக்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக விஷேட கூட்டங்களை நடத்தியதோடு,எனது விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்த அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை,ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்பனவற்றுக்கும் விஷேடமாக அவற்றின் தலைவர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழுவினருக்கும், அதேபோல் ஏனைய பல முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.சுப்ரீம் கவுன்ஸில் ஒப் தரீக்கா, ஜமாஅத் ஏ இஸ்லாமி,அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், கிழக்கு மாகாண சுன்னத் வல் ஜமாமத் இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
கிழக்கு மாகாணத்தில் எனது விடுதலையை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மகத்தானதும் மறக்க முடியாததும் ஆகும். அறிக்கைகள் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும்,சுவரொட்டிகளை ஒட்டியும்,ஹர்த்தால் அனுஷ்டித்தும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னை நெகிழச் செய்துள்ளன.கிழக்கு மாகாண மக்களுக்காக நான் தொடர்ந்தும் குரல் கொடுக்கத் தயாராக உள்ளேன்.
எனது விடுதலைக்காக ஒரு அமைப்பைத் தொடங்கி செயற்பட்ட எனது நண்பர்கள் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், நவ சமசமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,சிறிதுங்க ஜயசூரிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்ப்pனர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் என்னுடனான அரசியல் போதங்களை பொருட்படுத்தாமல் அந்த அமைப்பின் செயலாளர் பதவியை ஏற்று செயற்பட்ட எனது நண்பர் மேல் மகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி ஊறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு நான் என்றென்றும் நன்றி கூர கடமைப்பட்டுள்ளேன்.
எனக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் பங்கேற்ற மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இவர்களுக்கு நானும் எனது குடும்பத்தவர்களும் நன்றியுடையவர்களாக உள்ளோம்.
இவற்றுக்கெல்லாம் அப்பால் என்மீது கொண்ட நம்பிக்கை, அன்பு,பாசம் என்பனவற்றால் உந்தப்பட்டு எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி எனக்காக நோன்பிருந்து துஆ கேட்ட எனது உடன் பிறவா சகோதர சகோதரிகள்,என்னையும் தங்கள் பிள்ளை போல் நேசிக்கும் அன்புத் தாய்மார்கள் எனது வலது கரமாகவும் இடது கரமாகவும் செய்றபடும் எனது நெருங்கிய நண்பர்கள், எனது ஊடகப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சகல இனங்களையும் சேர்ந்த பொது மக்களுக்கும்,ஆதரவாளர்களுக்கும் எனது நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.உங்கள் ஆதரவு, ஆசீர்வாதம், பிரார்த்தனை என்பன என்றென்றும் எனக்கு தேவை. இன்ஷா அல்லாஹ் விரைவில் நான் மீண்டும் எனது வழமையான பணிகளை பழைய உத்வேகத்துடன் தொடர திட்டமிட்டுள்ளேன்.
நன்றி
அஸாத் சாலிபொது செயலாளர்
தேசிய ஐக்கிய முன்னணி
(தகவல் உதவி: முகம்மத் மவ்பிர்)