BREAKING NEWS

May 10, 2013

மென்செஸ்டர் யுனைடட் பிதாமகன்: சேர். அலெக்ஸ் பேர்குசன் ஓய்வு!


உலகின் மிகப் பெரிய கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக சேர். அலெக்ஸ் பேர்குசன் இன்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி வெஸ்ட் புரோம் அணியுடனான போட்டியுடன் தனது பதவிக்காலம் நிறைவடைவதாக பேர்குசன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினத்துடன் அவரது 27 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றது.
ஆங்கில கால்பந்தாட்ட வரலாற்றில் அணியொன்றை வெற்றிகரமாக வழிநடத்திய முகாமையாளர்களில் ஒருவராக அலெக்ஸ் பேர்குசன் கருதப்படுகின்றார்.

மென்செஸ்டர் யுனைடட் , வெஸ்ட் புரோம் அணியுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி விளையாடவுள்ள போட்டியானது அலெக்ஸ் பேர்குசனின்  முகாமையாளராக பணியாற்றும் 1500 ஆவது போட்டியாகும்.
தற்போது 71 வயதான பேர்குசன் 27 வருடங்கள் மென்செஸ்டர் யுனைடட் அணியின் முகாமையாளராக உள்ளார். அவர்  1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மென்செஸ்டர் அணியின் முகாமையாளராக பதவியேற்றார்.
அவரது முகாமைத்துவத்தின் கீழ் அவ் அணியானது 13 லீக் கிண்ணங்கள், 2 யூரோப்ப கிண்ணங்கள், 5 எப்.ஏ  கிண்ணங்கள், 1யூரோப்பியன் கோப்பை வெற்றியாளர் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது.

ஓய்வின்  பின்னர் அவர் அணியின் இயக்குனர்களில் ஒருவராக பதவி வகிப்பார் என மென்செஸ்டர் யுனைடட் கழகம் அறிவித்துள்ளது.
ஒரு அணி சிறப்பான நிலையில் உள்ள போது அதை விட்டுச் செல்ல வேண்டுமெனவும் அதையே தான் தற்போது செய்துள்ளதாகவும் பேர்குசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டே மென்செஸ்டர் யுனைடட் அணியின் முகாமையாளர் பதவியிருந்து விலகுவதாக பேர்குசன் அறிவித்த போதிலும் பின்னர் அவ் எண்ணத்தைக் கைவிட்டார்.
மென்செஸ்டர் யுனைடட் தவிர ஸ்கொட்லாந்து தேசிய அணி, சென் மிரன், கிழக்கு ஸ்ரேலிங்ஷயர், அபர்டீன் ஆகிய அணிகளினது முகாமையாளராகவும் பேர்குசன் பணியாற்றியுள்ளார்.

அவரது முகாமைத்துவத்தின் கீழ் மொத்தமாக 49 கிண்ணங்களை அவர் வென்றுள்ளார். போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ உட்பட இளம் வீரர்கள் பலரை உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக செதுக்கிய பெருமையையும் இவரையே சேரும்.
இதுமட்டுமன்றி பிரித்தானிய உதைப்பந்தாட்ட வரலாற்றில் அதிக தடவை வருடத்திற்கான சிறந்த முகாமையாளர் விருதை பெற்றவராகவும் பெர்குசன் திகழ்கின்றார்.
ஸ்கொட்லாந்து நாட்டவரான பேர்குசன் குயின்ஸ்பார்க் ரேன்ஜர்ஸ், ரேஞர்ஸ், ஜோன்ஸ்டோன், பெல்கேர்க்ஸ் உட்பட சில கழகங்களுக்காகவும், தேசிய ரீதியில் ஸ்கொடிஸ் லீக் XI, ஸ்கொட்லாந்து XI ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
இதன்போது அவர் சுமார் 180 கோல்களையும் அடித்துள்ளார்.
எனினும் தற்போது உடல் நிலை, வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர் அம்முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிகின்றது.
இந்நிலையில் அவருக்கு அடுத்ததாக இப்பதவியை தற்போது ஆங்கில கால்பந்து அணியான எவர்டொனின் முகாமையாளர் டேவிட் மோயஸ் வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் அணியின் முகாமையாளர் ஜோஸ் மொரினோவின் பெயரும் இப்பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட போதிலும் மோயஸ் இப் பதவியை பெறுவார் என மென்செஸ்டர் யுனைடட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதைப்பந்தாட்ட வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் நபராக கருதப்படும் பேர்குசனின் முடிவு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டுவிட்டர் (#thankyousiralex)  உட்பச சமூக வலையமைப்புகளில் பேர்குசன் தொடர்பாகவே பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &