பௌத்த தர்மத்தை இல்லாதொழிக்க சதித்திட்டத்தை முன்னெடுத்து வரும் கடும் போக்கு இந்துத்வ அமைப்பான சிவசேனா அமைப்பிற்கும் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையே தொடர்புள்ளதாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சாட்டினார்.
நோர்வேயிடம் நாம் பணம் பெற்றோம் என்ற குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அடுத்த நிமிடமே எமது அமைப்பை கலைத்து விட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொது பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே கலகொட அத்தே ஞான சார தேரர் இதனைத் தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைச்சர் விமல் வீரவன்ச தேசபற்று என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எமது அமைப்பின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார்.
நோர்வேயிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும் புலம் பெயர் தமிழர்களுடன் நோர்வே பிரதிநிதியின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.
உண்மையில் நடந்தது இதுதான். பொதுபல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டதற்கு முன்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தனிப்பட்ட ரீதியில் நாம் நோர்வே சென்றோம்.
48 வருடங்களாக அங்கு வாழும் இலங்கைப் பிரஜைகளின் அனுசரணையுடன் அங்கு வாழும் புலம் பெயர் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடன் பேசினோம்.
இதற்கு அம்மக்கள் இணங்கினார்கள். ஆனால், அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
அமைச்சர்
இச்சம்பவத்தை திரிபுபடுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச நோர்வேயிடம் பொது பல சேனா பணம் பெற்றதாக பொய்ப் பிரசாரம் செய்கின்றார்.
அமைச்சர் போன்று ஜனாதிபதியிடம் புறம் கூறி வயிற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது.
நோர்வேயிடம் பணம் பெற்றமை ஆதாரங்களுடன் அமைச்சர் நிரூபித்தால் அடுத்த கணமே எமது அமைப்பை கலைத்துவிட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவோம்.
இல்லாவிட்டால் அமைச்சர் கோவணதடதோடு வீட்டுக்கு போக வேண்டும்.
அமெரிக்க விஜயம்
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்தவிகாரை திறப்பு விழாவிற்கே நாம் அமெரிக்கா சென்றோம்.
அத்தோடு புலம் பெயர்ந்து அங்கு வாழும் முஸ்லிம் புத்திஜீவிகளை சந்தித்துப் பேசினோம்.
அவர்கள் இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
எங்கு செல்வதற்கும் எமக்கு உரிமையுண்டு.
உலகில் எந்தவொரு நாட்டுக்கும் செல்வதற்கு எமது அமைப்பிற்கு உரிமையுள்ளது.
அதனை தடுக்க எவராலும் முடியாது. அத்தோடு வெளிநாடு செல்ல எவரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமும் இல்லை.
ஹிரால் பவுண்டேஷன்
ஹிரால் பவுண்டேஷன் என்ற அமைப்பும் புத்தரின் பிறப்பையும் புத்தரின் பிறப்பை திரிவுபடுத்தி பௌத்தத்தை அழிக்கும் திட்டத்தை முன்னெடுக்கின்றது.
புத்தரின் பிறப்பை திரிபுபடுத்தி 52 புத்தகங்கள் வெளியிட்ட பாதுக்கையிலுள்ள பிக்குவின் பக்தைதான் அமைச்சர் விமல் வீரவன்சவின் துணைவியாராவார்.
எனவே, பௌத்தத்தை பாதுகாக்க சிங்கள மக்களை பாதுகாக்க முயலும் எம்மீது அமைச்சர் சேறு பூசுவது என்பதானது சிவசேனாவின் பௌத்த அழிப்புடன் அமைச்சர் விமலும் இணைந்துள்ளாரென்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அத்தோடு எம்மை அழிக்க அமைச்சர் மூன்று அமைப்புகளை கூட்டுருவாக்கியுள்ளார்.
எத்தனை அமைப்புகள் அமைத்தாலும் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கும் எம்மை அழிக்க முடியாது.
லிலந்த விதானகே
அமைச்சர் என் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நான் என். ஜீ. யோக்களின் நாய் குட்டியாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
நான் அப்படியிருக்கவில்லை. நாட்டுக்காக எனது கடமையைச் செய்தேன்
பல்கலைக்கழக பேராசிரியராக கடமைபுரிந்தேன். ரூபா 1 இலட்சத்திற்கு மேலாக சம்பளம் எடுத்தவன்.
அதை விடுத்து கமிஷன் பணத்தில் எனது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்று இங்கு தெரிவித்த லிலந்த விதானகே தெரிவித்தார்.