இலங்கையில் பௌத்த அமைப்பான பொது பல சேனாவை வன்முறை இயக்கம் என்று குறிப்பிட்டு அதனை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுகல்முனை மாநகர சபை ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின கூட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ் உள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை, துஷ்பிரயோகம்
அந்த அமைப்புக்கு அரசாங்கத்தின் ரகசிய உதவிகள் இருக்குமானால் அவை நிறுத்தப்பட வேண்டும், பொது பல சேனா ஏனைய மதங்கள் தொடர்பான தனது கொள்கையை மீளாய்வு செய்யத் தவறுமானால் அந்த அமைப்பு நாட்டின் நலன் கருதி தடை செய்யப்பட வேண்டும் என்றும் மாநகரசபையின் தீர்மானம் கோருகிறது.
நாட்டின் சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டார்கள் என்ற குற்றத்திற்காக அந்தஅமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேணடும் என அந்த தீர்மானத்தில் அரசாங்கத்தை கோரியுள்ளதாவும் அதற்கான பிரேரணையை சபையில் முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ. எம். பிர்தௌஸ் தெரிவிக்கின்றார்.
முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனாவின் செயல்பாடுகள் அதிகரித்து செலகின்றது. ஆனால் இவ்விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் காட்டும் அக்கறை முஸ்லிம்களை பொறுத்தவரை திருப்திகரமானதாக இல்லை என்றும் தமது சபை உள்ளுராட்சி சபையாக இருந்தாலும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் கவனத்திறகு இதனை கொண்டு வருவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தத் தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.