‘பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா? உண்மையை அறிந்து சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? என்ற தலைப்புடன் ஆரம்பிக்கும் அந்தப் பிரசுரத்தில்பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! உண்மையை அறிந்து சமாதானத்துடன் வாழுங்கள்! என்ற வாசகங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் கிழக்கு மாகாணத்தில் பரவலாக படையினர் துண்டுப் பிரமொன்றை விநியோகித்துக் வருகின்றனர்.கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினால் வழங்கப்படும் அறிவுரை என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளது.
பிரசுரத்தில் -’பேரன்பு மிக்க முஸ்லிம்களே அஸ்ஸலாமு அலைக்கும் !
பல நூற்றாண்டுகளாக சிங்கள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இலங்கை மக்கள் என்ற ரீதியில் ஒன்று பட்டு வாழ்ந்து வருகின்றனர்.அன்று அந்நிய நாட்டுப் படையெடுப்பின்போது ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியது மட்டுமல்லாது 1948 இல் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்விமான்கள் வழங்கிய ஒத்துழைப்பினை எவராலும் மறந்து விட முடியுமா?
நாம் எல்லோரும் இலங்கைத் தாயின் சகோதர சகோதரிகள் மட்டுமல்லாது இது நமக்குரிய நாடும் கூட. எமக்குள் இருக்கும் சகோதரத்துவத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சில அடிப்படை வாதிகள் தந்திரோபாயமாக எமக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது அம்பலமான விடயம்.
வெளிநாட்டு நிதியில் வாழும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளினால் வழிநடாத்தப்படும் தலைவர்கள் உங்களுடன் உங்கள் பிரதேசத்தில் இருக்கின்றார்கள்.இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை உங்களையும் உங்களது கிராமங்களையும் பாதுகாப்பதற்கு எவ்வளவோ தியாகங்களைச் செய்துள்ளார்கள்.
இதனைக் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளதுடன் எதிர்காலங்களிலும் அவ்வாறு பொறுப்புடன் செயற்படுவார்கள். சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினை வார்த்தைகள் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பழக்கமானவை அல்ல.
இன்று இலங்கைக்குள் எந்தவொரு இனரீதியான பிரிவுகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. இலங்கைக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு பல வெளிநாட்டு சக்திகள் கடந்த மூன்று தசாப்த காலமாக முயற்சித்தார்கள். அந்த சூழ்ச்சிகள் தோற்றுப்போய் விட்டன.
இந்த யுத்தத்தில் தாய் நாட்டைக் காப்பதற்கு முஸ்லிம் சகோதரர்கள் பலர் உயிர் நீத்தார்கள் அல்லவா? அப்படியாயின் முஸ்லிம்கள் இந்நாட்டின் அபிமானம் கொண்ட இலங்கை இனமன்றி அடிப்படை வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம்கள் வேறு இனமல்ல. இதைத் தெளிவுடனும் புத்தியுடனும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
உங்களின் மத வழிபாட்டிற்கும் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் இன்று மேலான சுதந்திரம் உங்களுக்குக் கிடைத்துள்ளது.இதேவேளை பல்வேறு முகமூடியணிந்து வரும் நாசகார சக்திகளிடம் நாம் மாட்டிக் கொண்டால் நாமே நமது சுதந்திரத்தை நாசம் செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய் விடும்.
முஸ்லிம், தமிழ், சிங்களம் என்ற எல்லா இனங்களும் ஒன்று பட்டு ஒரே இலங்கையராகப் பெற்ற சமாதானத்தை நிலை நிறுத்துவதோடு அடிப்படைவாத எண்ணத்தைத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கும் அமைப்புக்களை விரட்டியடிக்க வேண்டும்.’ என்றும் அந்தப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
