BREAKING NEWS

Mar 1, 2013

பிரிவினை வாதத்துக்கு எதிராக செயற்படுவது கட்டாயமானது: அமில தேரர்

தம்பர அமில தேரர்
முஸ்லிம் நீதிய (முஸ்லிம் சட்டம்) என்ற நூல் வெளியீட்டில் தம்பர அமில தேரர் ஆற்றிய உரையின் சுருக்கம்.

தமிழில்: பஸ்லான் பாரூக்

சிங்கள மொழியிலான பழைய இரண்டு பழமொழிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. ஒன்று ‘நீர்ப் பாத்திரத்திலிருக்கும் முதலையைப் போல’ மற்றது ‘குதிரை சென்றதும் குதிரை லாயத்தின் கதவை மூடுவது போல’ என்பனவே அவை.

இந்த இரண்டையும் வெளிப்படுத்தும் காரணியே இந்த கருணாரத்த ஹேரத்தின் ‘முஸ்லிம் நீதிய’ என்ற இந்த நூலாகும். மிகவும் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்திலே இது வெளி வருகிறது.
இது ஹலால் பற்றிய கருத்தாடல் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். அடுத்தது எமது சகோதரியான ரிஸானாவை இழந்துள்ள ஒரு சூழ்நிலை. எனவே மிகவும் நல்ல ஒரு நேரத்திலே இது வெளிவருகின்றது.
அதாவது முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் சமூகத்துக்குள் அல்லது இலங்கை சமூக சூழ் நிலைக்குள் இது பற்றி பேசக் கிடைப்பது மிகவும் பொருத்தமாகும்.
நான் இங்கு கலந்து கொண்டமைக்கு ஒரு பிரதான காரணி இருக்கின்றது. நாம் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கெடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கருணாரத்தன ஹேரத் மிகவும் மும்முரமாக அவற்றில் கலந்து கொண்டு, எப்போதும் அவற்றில் முற்போக்கான பக்கம் நின்று பங்கெடுத்தார். எனவே முற்போக்கான ஒருவருக்கு உற்சாகமூட்டும் வகையிலேயே இதில் கலந்து கொள்கிறேன்.
அதை விட மிக முக்கியமான காரணம், நான் மற்றும் நீங்கள் அறிந்த ஒரு சூழ்நிலை இன்று இருப்பதாகும். அது என்ன? நாம் எமது தேசத்தை எடுத்து நோக்கினால் சர்வதேச அளவில் ஏனைய தேசங்களுடன் பார்க்கும் போது நாம் சிறந்த தரத்தில் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது.
அதாவது அரசியல் நோக்கில் எடுத்துக் கொண்டாலும் நாம் உலகிற்கு முன்னுதாரணமாக இல்லை. பொருளாதார ரீதியாக எமது நாட்டை எடுத்தால் அதிலும் செழிப்பான வளர்ச்சியடைந்த ஒரு பொருளாதாரத்தை நாம் பெற்றில்லை என்றே கூற வேண்டும்.
கலாசாரத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள, தமிழ், முஸ்லிம் என நாம் அனைவரும் ஒன்றாக இருக்கும் சமூகம் என்ற வகையில் மிகவுமே அழகான மிக நல்ல ஒரு முன்னுதாரணத்தை எம்மால் இன்றும் உலகிற்கு வழங்க முடியாதுள்ளது.
நாம் நான்கு சமூகங்கள் இருக்கிறோம். எம்மால் ஏன் அது முடியாதுள்ளது என்ற காரணத்தை தேடும்போதுதான் திரு. கருணாரத்னவின் இந்த நூல் வெளிவருவது முக்கியத்துவம் பெறுகின்றது.
நாம் விசுவாசிக்கின்ற "இலங்கை தேசத்தை" எம்மால் இன்னும் கட்டியெழுப்ப முடியாமல் இருப்பது மிக வேதனைக்குரியது. இதனால் அயலில் உள்ள இந்தியாவுடன் ஒப்பிடும்போது எம்மைவிட அவர்கள் முன்னே இருக்கின்றனர். ஆனால் அது மிகவும் நல்ல முன்மாதிரி என்று சொல்ல முடியாது. ஆனால் முன்னால் இருக்கிறது.
அதற்கான காரணம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னேற்றகரமான விடயங்கள் இருந்தமையாகும். அவர்கள் உண்மையாகவே வெள்ளை சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒரு போராட்டத்தைச் செய்தனர். அதனுள்ளே மிக உயர்ந்த மனிதர்களின் மத்தியஸ்தம் இருந்தது. அதற்குள் இன ரீதியான, மத ரீதியான பேதங்கள் காணப்படாமையினால் இந்தியர்களுக்கு அது சாத்தியமாக இருந்தது.
காலனித்துவவாதிகளிடமிருந்து நாட்டைப் பெற்றெடுக்கும் போது, சுதேச இந்திய தேசம் என்ற கருத்தை குறிப்பிட்டளவு பெற முடியுமாக இருந்தது. எனவே 200 இனங்கள் இருக்கும் இந்தியா, இலங்கையைப் போன்று 64 மடங்கு பெரியது. நூற்றுக் கணக்கான மொழிகளும் அதிகளவான மதங்களும் காணப்படும் இந்தியாவுக்கு சுதேச இந்திய தேசம் என்ற கருத்தை குறிப்பிட்டளவில் வைத்துக் கொள்ள முடியுமாக இருக்கிறது.
‘நீங்கள் வருவது மிக நெருக்கம்’ (ஒப எனவா லங்க வெடிய்) ‘என்னை முத்தமிட வேண்டாம்’ (மாவ இபென்ன எபா)" என்பன போன்ற வசனங்களே எமது நாட்டு முச்சக்கர வண்டிகளின் பின்னால் நாம் காணக் கூடிய வாசகங்கள்.
இந்தியாவில் முச்சக்கர வண்டிகளின் பின்னால், பஸ்களின் பின்னால் எழுதியிருப்பது, ‘Be Indian’, ‘Buy Indian ‘நீங்கள் இந்தியானாக இருங்கள்’, ‘நீங்கள் இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்’ இதுதான் இந்தியாவின் கருத்தாக்கம்.
எனவே, பலவீனமான பொருளாதார நிலையில் இந்தியா இருக்கின்றபோதும், சாதாரண சட்டைப்பின் தொடக்கம் விண்வெளிக்கு செல்வது, மிசைல் வரை செல்வதற்கு ஓரளவேனும் அதற்கு முடியுமாகியுள்ளது. அது எமக்கு இன்னும் முடியாமலே உள்ளது. ஏனெனில், நாம் தேசத்தை நிர்மாணிக்கவில்லை.
இந்தியாவின் இமாலய மலையில் ஆறுகள் பல ஆரம்பிக்கின்றன.. கங்கை, யமுனை, போன்ற ஏராளமானவை. இலங்கையில் சமனல கந்தையில் நதிகள் ஆரம்பிப்பது போல் இந்தியாவில் இவ்வாறு ஆரம்பிக்கின்றன. அவை வேறு வேறாக தோன்றி வந்தாலும், அவை கடலில் சேர்ந்ததும் அவற்றை வேறு வேறாக பிரித்து அழைப்பதில்லை. கடல் என்றே அது வழங்கப்படுகிறது. "கங்கை" என்பதும் கடலில் சேரும்போது அதன் பெயர் நீங்கி விடுகின்றது.
உலகின் அனைத்துக் குப்பைகளையும் மீள்சுழற்சி செய்வது கடலாகும். சூழலுக்குத் தேவையானதை மிகவும் சுத்தமாகத் தருவது கடலாகும். ஆனால், அந்தக் கடலுக்குள் அந்த கங்கை, யமுனை, ஆகிய அனைத்தும் இருக்கின்றன. ஆனால், அவை அதனுள் தனியாக, தனி சக்தியாக இயங்குவதில்லை.
எனவே, சிங்களவர், முஸ்லிம், தமிழர் என்போரைத் தனித் தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு வரும் ஒரு துரும்பு போன்றுதான் இருப்பர். தனியாக இருக்கும் போது அவர்களால் எதனையும் செய்ய முடியாது. ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்தால் உலகத்தை மாற்றும் ஒரு செயலை செய்ய முடியும்.
அப்போதுதான் எம்மால் உண்மையான அரசியல், பொருளாதார, கலாசார சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது, இலங்கை ஏனைய நாடுகளுக்கு மத்தியில் மின்னுகின்ற உயரத்தை அடைந்ததாக மாறும்.
நட்பு, இலங்கைத் தேசியம், போன்ற பெறுமானங்களை நாம் பெற்றுக் கொள்வதில் எமக்குத் தடையாக இருக்கின்ற, முரண்பட்ட தன்மைக்கான சரியான பதில் ஒன்றையே திரு. கருணா ரத்ன அவர்கள் எமக்குத் தருகிறார்.
இதுதான் தேசிய சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டில் சட்டத்தரணிகள் என்ற தரப்பினரின் செயற்பாடாகும். எமது சமூகத்தில் பிக்குகள், மதகுருக்கள், நீதிபதிகள், சட்டத் தரணிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல தரப்பினர் இருக்கின்றனர்.
இவ்வாறு சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு தரப்பினரினதும் கடமையாக இருப்பது தேசத்தைக் கட்டியெழுப்புவதேயன்றி தேசத்தை சிதைப்பதல்ல. இது சகலரினதும் கடமையாகும். அவர்கள் தமது தொழிலுக்கு அப்பால் சென்று அக்கடமையை செய்ய வேண்டும்.
அதனைச் செய்ய முடியாதவர்கள், செய்யக்கூடியவர்களுக்கு இடத்தை விட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். தேசிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாரிய செயற்பாடாகவே இந்த நூல் வெளியீட்டை நான் காண்கிறேன்.
இன்றைய சூழ்நிலையில் அவரது இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என்ற பயத்தையும் கடந்து அவர் இதனை செய்திருக்கிறார். இது நீதித்துறையின் பரந்த எல்லையினைக் காட்டும் ஒரு முயற்சியாகும். சமூகங்களுக் கிடையிலான சமத்துவத்தை விருத்தி செய்யும் ஒரு பங்களிப்புமாகும்.
எனவே, இது அறிவுஜீவுகளின்- தேசபக்தர்களின் பணியாக இருக்கின்றது. இந்தப் பங்களிப்புக்காகவே நான் இதில் கலந்து கொண்டேன். தேசிய அபிவிருத்திக்குத் தடையாக இருக்கின்ற ஒரு காரணியை நீக்குகின்ற செயற்பாட்டை நூலாசிரியர் செய்துள்ளார்.
எனவே, இப்போது நாம் செய்ய வேண்டியது இதனை நன்கு ஆராய்வதாகும். எனவே, எமது சகோதர முஸ்லிம்களின் கலாசாரம் சார் விடயங்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் சுதந்திரப் போர் தொடக்கம் எம்மோடு தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்தவர்களே. டி.பி ஜாயா, சித்தி லெப்பை என்போர் வெறுமனே பள்ளிகளில் தங்கிச் சென்றோர் அல்ல.
கீழைத்தேய காலனித்துவ சக்திகளுக்கு எதிராக தமது வர்க்கத்தின் சக்தியைத் திரட்டியோர். அண்மைக்காலம் வரை எதிர்ச் சக்திகளைத் தோற்கடிக்க இராணுவத்தின் புலனாய்வுத் துறையில், நான் அறிந்த வகையில் அதிகமாகப் பங்கு கொண்டோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது சகோதர முஸ்லிம் மக்களாகும்.
பேதங்கள் இன்றி வாழ்கின்ற இவ்வுலகில், மீண்டும் குப்பைகள் மிதக்க ஆரம்பிக்கின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
சிங்களவர்கள் எனும்போது அண்ணனின் பங்கும் தந்தையின் பொறுப்பும் எமக்கிருக்கின்றது. தம்பியோ தங்கையோ தவறு செய்யும்போது, அவர்களை முழுமையாக தவறுக்குத் தள்ளி விடுவதில்லை. தவறு செய்தால் புத்திமதி கூறி நல்வழிப்படுத்தும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கருத்துக்கேற்ப தமது கட்சிகளை அமைப்புக்களை உருவாக்க வேண்டுமேயன்றி, மேலும் பிரிக்கின்ற தூரப்படுத்துகின்ற தீர்மானங்களை யாரும் எடுக்கக் கூடாது.
30 வருடங்களாக நாம் ஒரு பாரிய வேதனையுடன் இருந்தோம். இரத்தம் சிந்திக்கொன்டு இருந்தோம். இன்றும் எமது நாட்டில் 3 நேரம் சாப்பிட முடியாத பிள்ளைகள் இருக்கின்றனர். எமது கடன் இன்னும் முடிந்த பாடில்லை. எமது நாட்டில் தாராளமாக சொத்துக்கள், வளங்கள் இருக்கின்றன.
நான்கு நாகரிகங்களினால் போஷிக்கப்படும் நான்கு மதங்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவை நல்ல வரலாற்றைக் கொண்டவை. உலகில் சிரேஷ்டமான நான்கு மதங்கள் ஒன்றாகப் பெற்ற இடம் இலங்கை. அதனை நாம் பயன்படுத்த வேண்டும்.
பிளவுகளை ஏற்படுத்தி அடுத்தவரை அழிக்கும் இந்த செயற்பாடு போதும்போது மென்றாகி விட்டது. இதனை நிறுத்துங்கள் என்றுதான் நாம் அனைவரும் கூற வேண்டியுள்ளது.
இந்தப் பிரிவினைவாதத்துக்கு எதிராக செயற்படுவது கட்டாயமானது. அதனைச் செய்யாத போது உரியதைச் செய்யத் தவறியவர்களாகவே நாம் இருப்போம்.
இலங்கைத் தேசம் என்ற வகையில் -அனைவரும் மனிதர்கள் என்ற வகையில்- நாம் இதற்காக செயற்படுகின்றோம்.
இங்கு அமர்ந்திருப்பவர்களைப் பாருங்கள். பௌத்த தேரர், தொப்பி அணிந்த முஸ்லிம், கிறிஸ்தவர் என பலர் இங்கிருந்தனர். உலகில் இந்த அழகு எங்கு இருக்கிறது? உண்மையில் பன்மைத்துவத்திலிருந்தே அழகு வெளிப்படுகின்றது. பொலிவும் இலட்சணமும் தோன்றுவது அதிலிருந்துதான்.
ஒரு இனம் இருக்குமானால் அது அழகல்ல. பல இனங்கள் சேரும்போதே அங்கு அழகு பிறக்கிறது. அப்பன்மைத்துவத்தை பன்மையில் விட்டுவிடாமல், புரிந்துணர்வுடன் அவற்றின் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவோம்.
இலங்கைத் தாய்நாடு என்பதே எம் எல்லோரதும் இலக்காகும். சக்திவாய்ந்த பொருளாதாரம், சக்திவாய்ந்த நாடு, சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கை கொண்ட இராஜதந்திர நாடாக மாறுவது எமக்குக் கடினமான ஒன்றல்ல. நாம் ஒன்றுபட்டால் அது இலகுவான காரியமே.
இந்த நூலுக்கு நான் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். நூலின் முன்னுரையில் ஒரு சிறிய தவறு இருக்கிறது. பரிசுத்தக் குர்ஆன் என்பது 23 வருடங்களாக நபியவர்களுக்கு ஜிப்ரீல் என்ற ‘கடவுள்’ மூலமாகக் கொடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்ரீல் என்பது கடவுள் அல்ல. அவர் ஒரு தூதுவர் ஆவார்.
அல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்குமிடையிலான தொடர்பாடலின்போது, தூதுவராகச் செயற்பட்டவரே ஜிப்ரீல் என்று இங்கு வர வேண்டும். மற்றவகையில் நூல் சிறப்பாக அமைந்துள்ளது.
முஸ்லிம் சட்டம் பற்றி ஒரு பௌத்தர் ஒருவர் புத்தகம் வெளியிடுகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அதன் ஏற்பாடுகளில் பங்கெடுக்கிறது. இந்த அழகிய செயல் நமது கண்களுக்கு முன்னால் நடைபெறுகிறது. இது எவ்வளவு சிறந்தது.
இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும்போது, சிரித்துக் கொண்டே இவற்றைச் செய்து கொண்டு மரணிக்க முடியுமானால் எவ்வளவு நல்லது? இதுதான் சுவர்க்கத்துக்குப் போவது என்பது. இதுதான் விமோசனம் அடைவது. கடவுளின் அரவணைப்புக்குச் செல்வது என்பதும் இதுதான்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &