BREAKING NEWS

Jan 8, 2013

ரிசானாவின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்வோமா?

சகோதர, சகோதரிகளே.. உலகின் கவனத்தை ஈர்க்க நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்வோமா?

இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில் அவருக்காக இலங்கை மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஐந்து நிமிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று ரிசானா நபீக்கின் விடுதலை தொடர்பாக சவூதியில் இருந்து பணியாற்றும் டாக்டர் ஹிபாயா இப்திகார் தெரிவித்தார்.

அவர் இலங்கையிலிருந்து ரிசானா நபீக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஐக்கிய சகோதரத்துவ கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.ஜி. நஜீப் உடன் தொலைபேசி ஊடாக சவூதியிலிருந்து தொடர்புகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

சவூதி அரேபியா ஷரீஆ சட்டத்தை கண்டிப்பாக அமுல்நடத்தும் நாடு என்பதால் ரிசானா நபீக்கிற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே விடுதலை கிடைக்கும்.

இதேவேளை இலங்கையில் போராட்டங்கள் நடத்துவதாலோ அறிக்கைகள் விடுவதாலோ பலன் கிடைக்காது என்று அவர் தெரிவித்தார்.

ஷரீஆ சட்டத்தின் படி மன்னரினால் கூட மன்னிப்பு வழங்க முடியாது. எனவே எந்த நேரத்திலும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை டாக்டர் ஹிபாயா, மூதூரிலுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் புகைப்படம் ஒன்றினை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இந்தப் புகைப்படம் சிறையில் இருக்கும் ரிசானாவிடம் இறுதி நேரத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மூதூரிலுள்ள ரிசானாவின் தாயாருடன் ஊடகங்கள் தொடர்புகொண்டு வினவியபோது ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தான் ஓர் ஊடகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி குடும்பத்தினரின் புகைப்படத்தை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை இந்தச் செய்தி எழுதும் வரை ரிசானாவின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, டாக்டர் ஹிபாயா ரிசானாவின் தாயாரை தொடர்புகொண்டபோதும் இதுகுறித்துக் கூறாது, ரிசானா விரைவில் விடுதலையாவாள், விடுதலைக்காகப் பிரார்த்தியுங்கள் என்றே தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &