2050 ஆம் ஆண்டில் முஸ்லிம் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக வந்து விடுவார் என்று பெரும்பான்மை இனவாதிகள் அஞ்சுகின்றனர் என சக்தி தொலைக்காட்சி பணிப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.முஸ்லிம் சமூகத்தில் துணிச்சல்மிகு தலைமைத்துவத்தையும் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றனர்.எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
CIMS கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் முஹம்மட் முஸ்தபா ஞாபகார்த்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு சனிக்கிழமை (19) காலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார, சமூக சேவை, விளையாட்டுத் துறை, தகவல் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன், கலாநிதி அனுசியா சேனாதிராஜா, அம்பாறை மாவட்ட இராணுவ அதிகாரி கேணல் மேஜர் பிரியந்த கமகே, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் மேஜர் நவரட்ண, கல்முனை சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 200 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் CIMS கெம்பஸ் பணிப்பாளர் நாயகம் அன்வர் முஸ்தபா, அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா; கல்வியின் மகத்துவம், அதற்கு உதவ வேண்டியதன் அவசியம், தொழில்சார் நிபுணத்துவக் கல்வியின் அவசியம், றிஸானா விவகாரம், சமகால அரசியல், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள், முஸ்லிம் தலைமைகளின் போக்கு, முஸ்லிம் காங்கிரசின் இன்றைய அரசியல் பயணம், மாற்று சிந்தனையின் அவசியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விபரித்தார்.
Thanks: J M

