BREAKING NEWS

Nov 22, 2012

ஸர்மிளா' க்கு ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளனம் கண்டனம்


இலங்கையில் பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்று ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிலா ஸெய்யித் வெளிநாட்டு தமிழ் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டி தொடர்பாக 21-11-2012 மாலை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் கூடி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

'விபச்சாரத்தை நாடுவதோ விபச்சாரம் இடம்பெறுவதை அங்கீகரிப்பதோ இஸ்லாத்தில் தெளிவான, தீர்க்கமான சட்டத்தின் அடிப்படையில் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விடயமாகும். இதுகுறித்து முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஸர்மிலா ஸெய்யித் என்பவரால் பீ.பீ.சீ தமிழோசைக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட பேட்டியை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது.

விபச்சாரம் என்பது இஸ்லாத்தில் மாத்திரம் அல்லாது இலங்கையர்களால் பின்பற்றப்படும் பௌத்த ஹிந்து கிறிஸ்த்தவ மதங்களாலும் வெறுக்கப்படும் ஒரு விடயமாகும்.

இலங்கையில் உருவாக்கப்படும் சட்டங்கள் யாவும் இலங்கையில் காணப்படும் மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அமைவானதாக இயற்றப்படல் வேண்டும். மத ஒதுக்கல் கொள்கையின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டுள்ள மேற்கத்தேய சமூகக் கட்டமைப்புகளையும் சிந்தனைகளையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் வகையில் இலங்கையிலும் விபச்சாரத்தை சட்டரீதியாக்க வேண்டும் என்ற கருத்தினடிப்படையில் மேற்படி ஸர்மிலா ஸெய்யிதின் பேட்டியை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இது தொடர்பாக ஸர்மிலா ஸெய்யித் என்ன பின்புலத்தில் செயற்பட்டார் என்ற விபரத்தை அவரிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகளில் ஏறாவூர் பள்ளி வாசலகள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஈடுபட்டுள்ளது.

அதன் பின்னரே இந்த விவகாரம் குறித்த மேலதிக விவரமான அறிக்கையை ஏறாவூர் பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தால் வெளியிட முடியும் என எதிர்பார்க்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் சமூக நலன் கருதி சகலரும் நிதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &