நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில் 07 பேர் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளனர் . அவர்களில் மூன்று பேர் அம்பாறை மாவட்டத்திலும் மூன்று பேர் மட்டகளப்பு மாவட்டத்திலும் ஒருவர் திருகோணமலை மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேவளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சந்திரகாந்தன் மட்டும் வெற்றிபெற்றுள்ளார் .
அதேவேளை கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்களில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது
அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எம்.எஸ். உதுமாலெப்பை ஆரிப் சம்சுதீன் ஏ.எம்.அமீர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் .
அதேபோன்று மட்டகளப்பு மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எம்.எஸ்.அமீர் அலி சிப்லி பாரூக் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
திருகோணமலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட நஜீப் அப்துல் மஜீட் வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை கிழக்கில் மொத்தமாக 07 முஸ்லிம் பிரதிநிதிகளையும் 01 தமிழ் பிரதிநிதியையும் 04 சிங்கள பிரதிநிதிகளையும் பெற்றுள்ளது. கூட்டமைப்பின் பெரும்பான்மையை முஸ்லிம் பிரதிநிதிகள் பெற்றுள்ளனர்.
கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தால் ஆளுடம் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளில் பலம் 14 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
