BREAKING NEWS

Sep 1, 2012

நாளொன்றுக்கு மூன்று மில்லியன் ரூபா வருமானம் பெறும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு சுமார் ஒன்பதாயிரம் வாகனங்கள் பயணிப்பதுடன் அதனால் நாளொன்றுக்கு மூன்று மில்லியன் ரூபா வரை வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையான காலப் பகுதியில் சுமார் 750 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடுகின்றார்.

நாளொன்றுக்கு இந்த அதிவேக நெடுஞ்சாலையினூடாக எண்ணாயிரம் தொடக்கம் ஒன்பதாயிரம் வரையிலான வாகனங்கள் பயணிக்கின்றன. அதேவேளை, இந்த அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட தினத்திலிந்து இதுவரை 343 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பதிவாகியுள்ள விபத்துக்களில் மூன்று பாரதூரமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் மூவர் பலியாகியுள்ளனர். இவ்வருடத்தில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலையில் 292 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

சாரதிகளின் அவதானமின்மை மற்றும் கவனயீனமும் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காது வாகனங்களைச் செலுத்திய 2 ஆயிரத்து 88 வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடத்தில் மாத்திரம் இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 2 ஆயிரத்து 410 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சாரதிகள் போக்குவரத்து விதி முறைகளை முறையாகக் கடைப்பிடித்து அவதானமாக செயல்பட வேண்டுமென பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &