BREAKING NEWS

Aug 18, 2012

கொழும்பில் 7 ஏக்கர் காணி சுவீகரிப்புக்காக 500 குடும்பங்கள் வெளியேற்றப்படும் நிலை

கொழும்பு நகர பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வெளியேற்றி, வர்த்த ரீதியில் நன்கு பயன்தரக்கூடிய ஏழு ஏக்கர் காணிகளை விசேட செயற்த்திட்டமொன்றுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை சுவீகரிக்கவுள்ளது. குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை கடந்த மே 4ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷ விடுத்துள்ளார். நகர அபிவிருத்தி செயற்திட்டங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஹுனுப்பிட்டி, வேகந்த மற்றும் கொம்பனி வீதி ஆகிய பிரதேசங்களிலுள்ள காணிகள் சுவீகரிக்கப்பட்டவுள்ளன. இந்த காணிகள் விசேட அபிவிருத்தி திட்டத்துக்காக பொறுப்பேற்கப்படுகின்றது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளிலிருந்து வெளியேற்றப்படுபவர்களுக்காக நாம் ஒரு விசேட வீட்டு திட்டத்தை கொண்டுவருவோம் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஏற்கனவே அரசாங்கம் கொழும்பிலிருந்து சுமார் 1,500 குடும்பங்களை வெளியேற்றியுள்ளது. இவற்றில் 450 குடும்பங்களுக்கு தெமட்டகொடையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு பிரதேசத்தில் தற்போது ஹோட்டேல் நிர்மாண திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட பல குடும்பங்களுக்கான சட்ட நிவாரணத்தை தாம் நாடியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதனால் தான் 450 குடும்பங்கள் தெமட்டகொடையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, குறித்த காணிகளை சுவீகரிக்கும் திட்டம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார். எவ்வாறாயினும் குறித்த காணிகள் பொதுமக்களுக்கு சொந்தமானவையாகும். இதனால் அவர்களின் சொந்த வதிவிடங்களை பறித்துக்கொள்வது சுலபமான காரியமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &