By: AsSheikh Inamullah Masihudeen
காலையில் எழுந்தவுடன் திட்டமிடல் :
சுபஹு தொழுதுவிட்டு, அல்-குரானை ஒதுவது, திக்ரு அவ்ராதுகளை ஓதுவது என ஆன்மீக கடமைகளை செய்து அன்றைய தினத்தை அருள் நிறைந்ததாக ஆரம்பம் செய்தல் வேண்டும்.
அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள், சந்திக்க வேண்டியவர்கள், சாதிக்க வேண்டியவைகள் என்பவற்றை கால நேர வரையறைகளோடு திட்டமிட்டுக் கொள்ளுதல் அவசியமாகும்.
படுக்கைக்கு செல்லுமுன் சுய விசாரணை :
அதே போன்று அன்றைய நாள் நிறைவில் படுக்கைக்குச் செல்லு முன்னும் ஒருமுறை நாம் திருப்திகரமாக, ஆக்கபூர்வமாக அந்த தினத்தைக் கழித்தோமா, இல்லாவிட்டால், ஏன், எப்படி என்று சிறியதொரு மீட்டலை செய்து கொண்டு, நாளைய பொழுதை எவ்வாறு கழிப்பது என்ற திட்டமிடலை செய்து கொண்டு இரை தியானங்களை செய்து கொண்டு நித்திரைக்கு செல்லுதல் வேண்டும்.
திட்டமிடலும் நேர முகாமைத்துவமும்:
திட்டமிடலும் நேர முகாமைத்துவமும் எமது வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சங்களாகும், அப்பொழுதுதான் முதன்மைப் படுத்த வேண்டிய அம்சங்கள், தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள், எமது கடமைகள், பொறுப்புக்களில் இருந்து எம்மை பராக்காக்குகின்ற அம்சங்கள் குறித்து முடிவெடுக்கின்ற திறன் எம்மிடம் வளரும்.
கடமைகளை காலம் தாழ்த்ததிருத்தல் :
கல்வியாயினும், தொழில் முயற்சிகளாயினும், ஏனைய சமூகம்,தேசம் சார்ந்த சேவைகளாயினும் அவற்றை இன்றே செய்யவும், நன்றே செய்யவும் எம்மை நாம் வழக்கப் படுத்திக் கொள்ளும் பொழுது எமது ஒவ்வொரு பொழுதும் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமையும்.
காலம் கடந்த கைசேதம் வேண்டாம்:
மனம் போன போக்கில், அல்லது உலகம் போகிற போக்கில் குறிப்பாக நண்பர்கள் போகிற போக்கில் என வாழ்ந்து, எமது ஆன்மீக வாழ்வு, அறிவு தேடல்கள், வாழ்வாதார முயற்சிகள், குடும்ப சமூக கடமைகள், நட்புறவுகள், சமூக ஊடக பாவனைகள், எல்லாவற்றையும் மிகச் சரியான திட்டமிடலில் மேற்கொள்ளத் தவறின் காலம் கடந்து நாம் கைசேதப் படுவது நிச்சயம்.
குறிப்பு : சிறுவர்களை குழந்தைகளை சிறுவயதிலிருந்தே ஒரு வாழ்வியல் ஒழுங்கில் பராமரித்தல் வேண்டும், அறிவுரைகளை உபதேசங்களை குறைத்து அவர்களுடன் அவர்களோடு துணையாக நின்று அந்த ஒழுங்கில் அவர்களை வழக்கப்படுத்தி விடுதல் வேண்டும்.
அருளும் பொருளும் ஆன்மீகமும் ஆரோக்கியமும் என எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ்க வளமுடன்.!