02.04.2015 வியாழக்கிழமை ஹிரு தொலைக்காட்சியில் காலை 07.30
மணிக்கு 985வது அங்கமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட “பத்தரே
விஸ்தரே” என்னும் பத்திரிகை கண்ணோட்ட நிகழ்ச்சியில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முற்றாக மறைக்கப்பட்ட தலை கவசம் அணிவதனை தடைசெய்ய வேண்டும்
என்கின்ற, பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஒளிபரப்பு செய்யும்போது
“சிங்கள ராவய” எனும் பெளத்த கடும்போக்கு அமைப்பு
நடாத்திய ஓர் பத்திரிகை மாநாட்டை ஒளிபரப்பியது.
அந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு “மாகல்கந்தே சுதந்த” அவர்கள் முஸ்லிம் பெண்கள் அணிகின்ற நிக்காபினை ஒரு ஆணிற்கு அணிவித்து அந்த உடையினை முற்றாக தலையை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த ஒருவருடன் ஒப்பிட்டுக்காட்டி முஸ்லிம்களுடைய
இஸ்லாமிய உடையாகிய நிக்காபினையும், புர்தாவினையும்
முற்றாக மூடிய தலை கவசத்தினையும் தடை செய்ய வேண்டும் என்று மிகக்கேவலமாக முஸ்லிம்களுடைய அடிப்படை நம்பிக்கையினை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார் இவ்வாறான செயல்களை மிக வன்மையாக
கண்டிக்கின்றேன்.
கடந்த அரசாங்கத்தில்முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் ஹலால்
பிரச்சினைகளில் தொடங்கியது போன்று இவ்வரசாங்கத்தில்
நிக்காபில் தொடங்கி விடுமோ என அச்சப்பட வேண்டி இருக்கின்றது.
ஆட்சி மாற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பினை முஸ்லிம்கள் செய்திருக்கின்ற
இத்தருணத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் அடிப்படைகளுக்கு எதிராக
இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படும் போது அதனை கண்டும் காணாமல்
இருப்பது போன்ற நிகழ்வானது மேலும் முஸ்லிம்களை இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்கின்ற
செயலாக மாறிவிடும். ஆகவே இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் அலட்சியமாக
இருந்துவிடாமல் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் கடந்த அரசாங்கம் ஆதரித்து வளர்த்தெடுத்த கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனாவைப் போன்று இவ்வியக்கங்கள் சிங்கள,
முஸ்லிம் மக்களிடையே இன முறுகலை தோற்றுவித்து பாரியா அழிவிற்கு இட்டுச்செல்லும்
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த விடயத்தினை அதி உத்தமஜனாதிபதிக்கும், ஊடகத்துறை அமைச்சருக்கும் இந்நிகழ்ச்சியினை ஒளிபரப்பிய ஹிரு தொலைகாட்சி நிறுவனத்திற்கும் இது தொடர்பான
அதிருப்தியினை எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தெரிவித்தார்.