
கஷ்டப்பட்டு வாங்கிய புது கார் அல்லது பைக்கை, நீங்கள் எப்படியெல்லாம் பார்த்துக்கொள்வீர்கள்? தெரியாமல் கோடு விழுந்தால்கூட துடித்துப்போவீர்கள்தானே!
ஆனால் தனது கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்ற காரணத்துக்காக, கோடரியால் தனது புது ஃபியட் 500 காரை, மில்லி மீட்டர் கேப் விடாமல் கொத்தி எடுத்து தனது கோபத்தைத் தணித்துக் கொண்டுள்ளார், இத்தாலியைச் சேர்ந்த ஸ்பார்டாகோ கேப்பன் என்பவர்.
ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ன்ட்டாக வேலை செய்கிறார் ஸ்பார்டாகோ. அன்று வழக்கம்போல் அலுவலகம் செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்தார் ஸ்பார்டாகோ. கார் மக்கர் செய்ய, செம டென்ஷனாகிவிட்டார்.
இதற்கு முன்பு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி அலுவலகத்துக்குச் சென்று வந்தாராம் ஸ்பார்டாகோ. பலமுறை அலுவலகத்துக்குத் தாமதமாக வந்ததற்காக கண்டிக்கப்பட்டவரான அவர், அன்று தனது சீனியரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார்.
இதில் கடுப்பான ஸ்பார்டாகோ கேப்பன், உள்ளே சென்று கோடரியை எடுத்துவந்து, ‘இனிமே மக்கர் பண்ணுவியா... பண்ணுவியா?’ என்று ‘படிக்காதவன்’ ரஜினி ஸ்டைலில் காரை அலங்கோலமாக்க இதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.
‘‘இன்றைக்கும் லேட்டாகிவிட்டால் எனது சுப்பீரியரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்பதால், கோபம் வந்துவிட்டது.
பிரியமானவர்களிடம்தானே நமது கோபத்தைக் காட்ட முடியும்! அதுதான் இப்படி நடந்து கொண்டேன்!’’ என்று போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஸ்பார்டாகோ.
இப்போது, மனநல சிகிச்சை மையத்தில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார் கேப்பன்.
கேப்பன் வீட்டு வாசலில், 500-க்கும் மேற்பட்ட கீறல்களுடன் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறது ஃபியட் 500 கார்.