உக்ரைனில் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களுக்கு ரஷ்யா மறைமுக ஆதரவு தருகிறது என்று அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டுமென்று அமெரிக்கா உள்பட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. அதன்பின், ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்தன. அதிக வருவாயைத் தரும் நிதி மற்றும் தளவாட தொழில்கள் தொடர்பாகவும் சமீபத்தில் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க உணவு பொருட்கள் மற்றும் ஐரோப்பிய விவசாயப் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய ஓராண்டுக்கு தடை விதிக்கும் உத்தரவில் நேற்று புடின் கையெழுத்திட்டார்.அமெரிக்காவில் இருந்து சிக்கன் உள்பட பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து காய்கறிகள், பழங்கள் போன்றவை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஐரோப்பிய யூனியனில் இருந்துதான் ஏற்றுமதியாகும் காய்கறிகளில் 21.5 சதவீதம் ரஷ்யாவுக்குதான் சென்றன.
அதே போல், அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 76,100 டன் சிக்கன் ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. இப்போது ரஷ்யாவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும். தற்போது ரஷ்யாவுக்கு கூடுதலாக சிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்களை பிரேசில் அனுப்ப உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.