BREAKING NEWS

Jun 16, 2014

அளுத்கமை தர்கா நகர் அசம்பாவிதம் தேசிய ஷூறா சபை கண்டனம்

அளுத்கமை தர்கா நகர் அசம்பாவிதங்களுக்கு தேசிய ஷூறா சபை கண்டனம்; குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும், வன்முறையைக் கட்டுப்படுத்துமாறும் வேண்டுகோள் தர்கா நகர், பேருவளை மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் தற்போது இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து தேசிய ஷூறா சபை ஆழ்ந்த கவலையையும் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. 

அளுத்கமை நகரில் பொதுபல சேனாவினர் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கும் ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்க வேண்டாம் என தேசிய ஷூறா சபையும் சிவில் சமூக தலமைகளும் அரசியல் தலைமைகளும் உலமாக்களும் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வேண்டியிருந்தன.

சுமுக நிலைக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் அந்த வேண்டுகோள் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பது கவலைகுரியது. இதுவரை துப்பாக்கிச் சூடு காரணமாக தர்காநகரைச் சேர்ந்த 3 பேர் பலியாகியதுடன் 15 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அதிகாரிகொடைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் உட்பட 5 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட இழப்புகள் பற்றிய செய்திகள் தொடர்ந்தும் வந்தவண்ணமே உள்ளன. அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் இந்நிலமையை கட்டுப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தேசிய ஷூறா சபை வேண்டிக் கொள்கிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் சபை மேலும் வேண்டியுள்ளது.

தகவல்களை ஊர்ஜிதம் செய்யாமல் பரப்புவதன் மூலம் அனாவசியமான பதட்ட நிலை பல இடங்களுக்கும் பரவுகிறது. இதனால் பீதியான மனோநிலை எங்கும் பரவி வருகிறது. ஆதலால் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டதன் பின்பே அவற்றை வெளியிடுமாறு பொது மக்களையும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரையும் தேசிய ஷூறா சபை வினயமாக வேண்டியுள்ளது. டுவிட்டர், முகநூல் போன்றவற்றில் வன்முறைகளைத் தூண்டும் புகைப்படங்களையும் செய்திகளையும் வாசகங்களையும் பகிரவேண்டாம் எனவும், இது நிலமையை மேலும் சிக்கலாக்கும் என்பதை சம்பந்தப்பட்டோர் கவனத்தில் கொண்டு பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளுமாறும் தேசிய ஷூறா சபை வேண்டியுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &