பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மன்னிப்புக் கோர வேண்டும் – பொதுபல சேனா
பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மன்னிப்புக் கோர வேண்டும் என பௌத்த தீவிர வாத அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில்,
இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் பின்னர்தான் இங்கு வரவேண்டும்.
எமது நாட்டில் மதங்களுக்கிடையே மோதல்கள் கிடையாது.
பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு நல்லிணக்கத்துடனேயே வாழ்கின்றனர்.
மதங்களிடையே மோதல்கள் கிடையாது. ஒரு சில அடிப்படைவாத மதச் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாகவே சிறு சிறு பிரச்சினைகள் தலைதூக்குகின்றனவே தவிர, முழு நாட்டிலும் மத நல்லிணக்கம் காணப்படுகிறது.
எனவே, இங்கு மத நல்லிணக்கம் இல்லையென்று கூறிய கருத்துகளுக்கு பாப்பரசர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாப்பரசர் உலகம் மதிக்கும் ஒரு மதத்தலைவர். அவர் இங்கு வரலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.
எமது நாடு தொடர்பில் கருத்துகளையும் வெளியிடக்கூடாது. இங்கு வரலாம், போகலாம். ஆனால், இலங்கையில் எந்தெந்த பிரதேசத்திற்கு பாப்பரசர் போக வேண்டும். யார் யாரை சந்திக்க வேண்டுமென்பதை அனைத்தையும் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இலங்கை தொடர்பிலான பிழையான கருத்துகளுக்கு அவர் இரையாகி விடுவாரென்றும் இராவணா சக்தியின் தலைவர் இத்தேகந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.