BREAKING NEWS

Feb 13, 2014

சமூகத்தின் பிரதிநிதியாக தேசிய ஷூறா சபை

Tharik Mahmood




தேசிய ஷூறா சபையின் நிர்வாகிகள் தெரிவு கடந்த மாதம் இடம்பெற்றது. தேசிய ஷூறா சபையின் தலைவராக கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் புதல்வர் தாரிக் மஹ்மூத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடன் மீள்பார்வைக்காக மேற்கொண்ட நேர்காணல் இது.
சந்திப்பு - இன்ஸாப் ஸலாஹுதீன்
தேசிய ஷுறா சபையின் தோற்றம் மற்றும் இயக்குனர் சபைத் தெரிவு பற்றிக் கூற முடியுமா?
முஸ்லிம் எதிர்ப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்த போது தனிப்பட்ட முறையில் பலரும் அதற்குக் குரல் கொடுத்தனர். இத்தகைய ஒரு சமூகப் பிரச்சினைக்கு தனிப்பட்ட குரல்களால் எதுவும் செய்துவிட முடியாது. எனவே ஷூறா அடிப்படையில் இணைந்த ஒரு தலைமைத்துவத்தின் அவசியத்தை இது மேலும் வலுப்படுத்தியது. சில நல்ல உள்ளங்களின் கவலையின் அடியாகவே இது தோற்றம் பெற்றது.
முழு சமூகத்தின் பிரச்சினை ஒன்றை சமூகப் பிரதிநிதிகளுக்கு மத்தியில் வைத்து உரையாடி கலந்தாலோசனை செய்ய இத்தகைய ஒரு சபை எங்களிடம் இருக்கவில்லை. அத்தகைய ஒரு முன்னெடுப்பாகவே இச் சபை உருவாக்கப்பட்டது.
கடந்த ஜுலை மாதம் ஒரு இடைக்கால சபை தோற்றம் பெற்றது. இதன் பொதுச்சபை 2014 ஜனவரி 25இல் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிரந்தர தலைமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டது. பதவிபுகழ் ஆசையின்றி உணர்வு பூர்வமாக அமைதியான முறையில் தெரிவு இடம்பெற்றது.
உங்களது தந்தை கலாநிதி பதியுத்தீன் முஹம்மத் அவர்கள் சமுதாயத்தின் சிறந்த தலைவர்களுள் ஒருவர். சமூகத்திற்குப் பணியாற்ற உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் இது பாரிய ஒரு பொறுப்புதான். அல்லாஹ்வின் உதவி இருந்தால் எல்லாம் இலகு வாக அமையும். பலரும் இவ்விட யத்தில் என்னை ஈடுபடுமாறு ஆர்வத்துடன் கேட்டனர். நான் எனது மார்க்கப் பணியுடன் இரு ந்து கொள்கிறேன்இதற்குப் பொருத்தமான வேறு பலர் இருப் பதாகவும் கூறினேன். ஆனாலும் இலகுவாக என்னால் இதிலிரு ந்து நீங்கிக் கொள்ள முடியவில்லை. சமூகம் விரும்பும் போது நான் பின்வாங்க முடியாது. என்னால் முடியுமானவரை இதில் உழைக்க நாடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.
இலங்கை முஸ்லிம் சமூகம் பல அமைப்புகளைநிறுவனங்க ளைக் கொண்ட ஒன்று. அனைவ ரும் இணைந்து பணியாற்றுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பல சிந்தனைகளைக் கொண்ட வர்கள் உலகத்தில் இருப்பது போல பல நிறுவனங்கள்இயக்கங்களும் இருக்கின்றன. இந்த ஷூறா சபையிலும் இத்தகைய அனைவரும் இருக்கின்றனர். அனைவரும் சந்தோசமாக உம்மத்துக்காக ஒன்றிணைந்திருக்கின்றனர். சகோதரத்து வாஞ்சையுடன் நடந்து கொள்கின்றனர். இது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகின்றது.
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் மொத்தமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் “என்று அல்லாஹ் கூறுகிறான். இங்கு “ஜமீஅன்“ என்பது மொத்தமாக (collective)என்பதையே குறிக்கின்றது. அபிப்பிராய வித்தியாசங்கள் இருந்த போதும் இணைந்த நிலையில் பணியாற்றுவதே முக்கியம். அடுத்த வசனத்தில் நீங்கள் பிரிய வேண்டாம் என்று கட்டளையாக அல்லாஹ் கூறுகிறான்.
ஷூறா சபைக்கு ஜம்இய்ய துல் உலமாவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளும் இதில் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறோம். இனிவரும் காலங்களிலும் எங்களுடன் முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
சமூகப் பிரச்சினைகளில் நீங்கள் முன்னெடுத்த வேலைத் திட்டம் பற்றிக் குறிப்பிட முடியுமா?
சமூகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நாம் எமது பங்களிப்பை வழங்கி வருகிறோம். இடைக்கால சபையாக இயங்கும் போது அவ்வப்போது வந்த பிரச்சினைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். முஸ்லிம்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளோம். நாங்கள் இப்போது ஆரம்ப நிலையில் இருக்கிறோம். சமூகத்தின் ஒத்துழைப்பு எங்களுக்கு மிகவும் தேவை.
அந்த மகஜருக்கு என்ன நடந்தது?
முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரி முழு முஸ்லிம் சமூகமும் முன்வைத்த கோரிக்கையே அது. இது தொடர்பில் அவர்கள் நிச்சயம் கவனம் எடுக்க வேண்டும். உரிய முறையில் இந்த நாட்டின் உயர்பீடத்திற்கு அதனை எத்தி வைத்துள்ளோம். இனி அவர்கள் செய்ய வேண்டியதுதான் மீதமுள்ளது.
ஷூறா சபைக்கு முன்னுள்ள பிரதான சவால்களைக் குறிப்பிடுவீர்களா?
இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதுதான் எமக்கு முன்னுள்ள பிரதான சவால். தலைமைத்துவத்திற்கு ஆசைப்படும் இடமல்ல ஷுறா சபை என்பது. சமூக விவகாரங்களில் ஆலோசனை சொல்லும் இடம்தான் இது. சமூகத்தின் பிரதி நிதிகளைக் கொண்ட ஒரு சபையாகவே இது இயங்கும். நிறையப் பேர் இதில் பங்களிக்கலாம்.
ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே அபிப்பிராயத்தில் இருப்பதல்ல. அனைவரும் ஒரே கருத்தில் இருக்கும் போது ஒற்றுமை தேவையில்லை. அபிப்பிராய வித்தியாசங்களுக்கு மத்தியில் தான் ஒற்றுமை தேவைப்படுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக்கொடுத்து சமுதாய நலனை முதன்மைப்படுத்தி பணியாற்றும் பக்குவமே இன்று தேவைப்படுகிறது.
பெண்களின் பிரதிநிதித்துவம் ஷூறா சபையில் எந்த நிலையில் இருக்கிறது?
பெண்களின் பிரதிநிதித்துவம் கொள்கை அளவில்தான் இருக்கிறது. அது குறித்து நாங்கள் பேசி வருகிறோம். பெண்களின் ஆலோசனைகளை நாங்கள் மறுக்க வில்லை. எடுக்க மாட்டோம் என்றும் சொல்ல வில்லை. நிச்சயம் அவற்றை எடுப்போம். முதலில் எங்களை ஸ்தீரப்படுத்திக் கொண்டு அடுத்த விடயங்கள் குறித்து நிச்சயம் சிந்திப்போம்.
ஷுறா சபையின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்திடம் என்ன வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறீர்கள்?
முஸ்லிம்கள் இஸ்லாம் எனும் மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்கள். இதனை நடைமுறைப்படுத் துபவர்களாக நாம் மாறினால் எமது நிறையப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை சரியாக பல் சமூகங்களுக்கு மத்தியில் பிரதிநிதித்துவம் செய்யும்போது பிரச்சினைகள் நிச்சயம் குறையும். எமது மூதாதையர் இதனை சிறப்பாகச் செய்தனர். எனவே பெரும் பான்மையினருக்கு மத்தியில் உயர்ந்த இடங்களைப் பெற்றார்கள்.
அனைவரும் மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் நாம் ஏனையவர்களைப் பார்க்க வேண்டும்பழக வேண்டும். மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினை என்பதில்லை. அனைவரையும் கண்ணியத்துடன் நோக்க வேண்டும் என்றே எமது மார்க்கம் கற்றுத் தருகிறது. நல்ல பண்பாடுகளைக் கொண்ட மார்க்கமாக எமது மார்க்கம் இருக்கிறது. ஏன் அவற்றை நாம் அடுத்தவர்களுக்கு பரிசளிக்கக் கூடாதுஅனைத்து இடங்களிலும் நல்ல முன்மாதிரிகளை நாம் வழங்க வேண்டும். மார்க்கத்தை ஆழமாக விளங்கும் போதும் இவற்றை இலகுவாக நடை முறைப்படுத்தலாம்.
ஷுறா சபைக்கு சமூகத்தின் ஒத்துழைப்பு இருக்கிறது என்பதனை நான் அறிவேன். இன்னும் முழுமையாக அதனை சமூகம் வழங்க வேண்டும். சமூக நிறுவனங்கள்,அமைப்புக்கள்,அரசியல்வாதிகள் என அனைவரினதும் ஒத்துழைப்பை ஷுறா சபை எதிர்பார்க்கிறது.
ஷூறா சபை அழுத்தங்களுக்கு அடிபணியுமா?
ஷுறா சபை எந்த அழுத்தங்களுக்கும் உட்பட்டதல்ல. யாருடைய ஆதிக்கத்திற்கும் உட்பட்டதுமல்ல. அது தனித்துவமாகவே இயங்க விரும்புகிறது. சமுதாய நலனுக்காக உழைப்பவர்கள் அனைவரதும் ஒத்துழைப்பைஆலோசனையை அது எதிர்பார்க்கிறது.
நன்றி: மீள்பார்வை

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &