கண்டி மஹாநாயக்கர்களிடம் ஆசி பெறச் சென்ற பிரதம
நீதியரசர் மொஹான் பீரிஸ், மெளலவி பஸ்லுர் ரஹ்மான் தலைமையிலான கண்டி நகர
ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற சந்திப்பின் போது சமூக
நல்லிணக்க விடயங்களில் கண்டி நகர உலமா சபையினரின் பங்களிப்பைப் பாராட்டியதோடு சுமார்
ஒரு மணி நேரம் விரிவான கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து கண்டி நகர
உலமா சபைத் தலைவர் மெளலவி பஸ்லுர் ரஹ்மான் கருத்து வெளியிடுகையில், குறித்த
சந்திப்பு பிரயோசனமானதாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்ததாகவும், பிரதம நீதியரசர்
உலமாக்கள் மீது மிகுந்த கெளரவம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது அவ்வப்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு
எதிராக இடம்பெற்று வரும் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பிரதம நீதியரசர்
அனைத்து பெளத்த மக்களையும் ஒரே தட்டில் வைக்க முடியாது என்றும், ஒரு சிலர் இவ்வாறு
நடந்து கொள்வதால் அனைவருக்கும் கெட்ட பெயர் என தெரிவித்துள்ளதுடன், அண்ணல்
நபிகளாரின் வழிமுறைகளையும் உபதேசங்களையும் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும்
தமது கருத்தை வெளியிட்டதுடன் சமூக இணக்கப்பாட்டிற்கு தொடர்ந்தும் கண்டி உலமா
சபையினரின் பெறுமதியான பங்களிப்பைக் கோரியுள்ளார்.
கண்டி நகர ஜம்மியத்துல் உலமா காரியாலயத்தில்
இடம்பெற்ற இச்சந்திப்பில் சபையின் செயலாளர் உட்பட உறுப்பினர்களும், கண்டி மாவட்ட
நீதிமன்ற நீதிபதி வசந்த குமாரவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.