
உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டீவ் பால்மர் அறிவித்துள்ள நிலையில் அப்பதவிக்கு அடுத்ததாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.
இதில் 5 மிக முக்கியமான நபர்களின் பெயர்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்ட் மோட்டார் நிறுவனத்தின் அலன் முலாலி, நொக்கியாவின் ஸ்டீபன் இலோப் ஆகிய வெளிநிறுவனங்களைச் சேர்ந்த இருவரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இதேபோல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தைச் சார்ந்த சிலரது பெயர்களும் நிறைவேற்று அதிகாரி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
ஸ்கைப்பின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும், மைக்ரோசொப்டின் வியாபார அபிவிருத்தி பிரிவைச் சேர்ந்தவருமான டொனி பேட்ஸ் மற்றும் கிளவுட், எண்டர் பிரைஸ் பிரிவின் தலைவருமான சத்யா நடீலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்யா இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர வேறு சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அடுத்த பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் பால்மர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
தன் பதவிக்கு இன்னுமொருவர் நியமிக்கப்படும் வரையில் பதவியில் இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் தானாக ஓய்வு பெறவில்லையெனவும் மோசமான நிதிச் செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு பதவி விலகும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.