மெல்போர்ன்: ஆஸ்திரேலிய வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். மேலும், 1000 குடிசைகள் சாம்பலாகியுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 18 இடங்களில் காட்டுத்தீ பற்றியுள்ளது.
காற்றின் வேகத்தால் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதுமே புகை மூட்டமாகக் காட்சி அளிக்கிறது. இந்தத் தீயினை அணைக்க சுமார் ஒருவார காலம் ஆகலாம் எனச் சொல்லப் படுகிறது.
ஹெலிகாப்டர்கள் மூலம் வானிலிருந்து நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டும் தீயை முற்றிலுமாக அழிக்க இயலவில்லை.
காட்டு தீயில் சிக்கிய 62 வயது முதியவர் தனது வீட்டைப் பாதுகாக்க முயன்றபோது பரிதாபமாகப் பலியானார்.
வனப் பகுதிக்கு அருகேயுள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் அதன் அருகேயுள்ள சிட்னி நகர மேகங்களில் படிந்துள்ளது. இதனால் அந்த நகரம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.