தடகள அரங்கில் அசைக்க முடியாத மன்னன் என்பதை அழுத்தமாக நிரூபித்தார் ஜமைக்காவின் உசைன் போல்ட். நேற்று நடந்த 200 மீ., ஓட்டத்தில், "ஹாட்ரிக்' தங்கம் வென்று சாதித்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில், "மின்னல் வேகத்தில்' பறந்த ஜமைக்காவின் உசைன் போல்ட், 19.66 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகளத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக(2009, 2011,2013) தங்கம் வென்று "ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
மற்றொரு ஜமைக்கா வீரர் வாரன் வெயர், 19.79 வினாடியில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். அமெரிக்காவின் கர்டிஸ் மிட்சல், 20.04 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.
இம்முறை ஏற்கனவே 100 மீ., ஓட்டத்தில் முதலாவதாக வந்த போல்ட், தனது இரண்டாவது தங்கப்பதக்கத்தை பெற்றார். தவிர, உலக தடகள வரலாற்றில் தனது 7வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
3வது தங்கம் நோக்கி:
உலக தடகள போட்டியின் கடைசி நாளான இன்று 4*100 மீ., ஓட்டத்தில் உசைன் போல்ட் பங்கேற்கிறார். இதில் அசத்தும் பட்சத்தில், மூன்றாவது தங்கம் வெல்லலாம். இதற்கு முன் 2009 உலக தடகளம், 2008 (பீஜிங்), 2012 (லண்டன்) ஒலிம்பிக்கில் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
உகாண்டா தங்கம்:
ஆண்களுக்கான மாரத்தான் (42.195 கி.மீ.,) போட்டி நடந்தது. மொத்தம் 40 நாடுகளை சேர்ந்த 70 பேர் பங்கேற்றனர். இதில் உகாண்டாவின் ஸ்டீபென் கிப்ரோடிக், 2 மணி நேரம், 09:51 நிமிட நேரத்தில் கடந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். எத்தியோப்பியாவின் லெலிசா டெசிசா, 2 மணி நேரம், 10:12 நிமிட நேரத்தில் கடந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
மற்றொரு எத்தியோப்பியா வீரர் டடெசே டோலா, 2 மணி நேரம், 10:23 நிமிடத்தில் வந்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
எத்தியோப்பியா அபாரம்:
பெண்கள் 5000 மீ., ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் டிபார், 14:50.19 நிமிடத்தில் வந்து தங்கம் வென்றார். மற்றொரு எத்தியோப்பிய வீராங்கனை அயானா (14:51.33 நிமிடம்) வெண்கலம் கைப்பற்றினார். கென்யாவின் செரோனோவுக்கு (14:51:22 நிமிடம்) வெள்ளி கிடைத்தது.
ரஷ்யா அசத்தல்:
பெண்கள் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் ரஷ்யாவின் குஷ்சைனா, பிரோவா, ரைஜோவா, கிரிவோஸ்ஷப்கா அடங்கிய அணி, 3:20.19 நிமிடத்தில் கடந்து தங்கம் வென்றது. அமெரிக்கா (3:20.41 நிமிடம்), பிரிட்டன் அணிகள் (3:22.61 நிமிடம்) முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றன.
பெண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா ஷிக்கோலினா, 2.03 மீ., தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். அமெரிக்காவின் பேரட் பிரிகெட்டா (2.00 மீ.,) வெள்ளி வென்றார். 1.97 மீ., உயரம் தாண்டிய ரஷ்யாவின் அனா சிச்செரோவா, ஸ்பெயினின் பெய்டியாவுக்கு வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.
தடை ஓட்டத்தில் தங்கம்:
100 மீ., பெண்கள் தடை ஓட்டத்தில் அமெரிக்காவின் பிரியன்னா ரோலின்ஸ் (12.44 வினாடி), தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சனுக்கு (12.50 வினாடி) வெள்ளி தான் கிடைத்தது. பிரிட்டனின் டிபானி போர்ட்டர் (12.55 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் செக் குடியரசின் வெஸ்லே, 87.17 மீ., எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பின்லாந்தின் பிட்கமாக்கி (87.07 மீ.,), ரஷ்யாவின் டிமிட்ரி டாராபின் (86.23 மீ.,) ஆகியோர் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
.jpg)