BREAKING NEWS

Aug 24, 2013

இரசாயன தாக்குதல்: கண்காணிப் பாளர்களை அனுப்ப சிரியா மீது அழுத்தம்



ஆயுதக் களைவு தொடர்பான ஐநாவின் தலைமை அதிகாரியான ஏஞ்சலா கேன் டமாஸ்கஸ் சென்றிறங்கியுள்ளார்.

கூட்டா என்ற இடத்தில் சிரியாவின் அரச படைகள் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுவதை அரசங்கம் மறுக்கிறது.சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தபட்டதாகத் தெரிவிக்கப்படும் இடங்களுக்குச் செல்ல சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வேண்டும் என அந்நாட்டின் அரசாங்கத்திடம் வலியுறுத்துவது இவரது பயணத்தின் நோக்கம்.

இதனிடையே டமாஸ்கஸுக்கு கிழக்கே ஜோபார் என்ற இடத்தில் கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்துகின்ற சுரங்கப் பாதைகளில், ஆயுதமாகப் பயன்படுத்தப்படக்கூடிய இரசாயனங்களை சிப்பாய்கள் கண்டெடுத்துள்ளதாக சிரியாவின் அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் விஷயத்துக்கு எவ்விதத்தில் பதிலளிப்பது என்பது பற்றி விவாதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது முக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

இரானிய அதிபர் கண்டனம்

இதனிடையே டமாஸ்கஸில் மக்கள் பலர் இரசாயன ஆயுதங்களால் கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருப்பது வருத்தமளிக்கிறது என சிரியாவின் பிராந்திய நட்பு நாடான இரான் கூறியுள்ளது.

இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை இரானிய அதிபர் ஹஸ்ஸாய் ரொவ்ஹானி வன்மையாகக் கண்டித்தார்.

இரான் - இராக் யுத்தத்தின் சமயத்தில் இவ்வகையான ஆயுதங்களின் பாதிப்பை இரானும் சந்தித்துள்ளதென்று அவர் கூறினார்.

இருந்தாலும் சிரியாவில் மோதலில் ஈடுபட்டு எந்த ஒரு தரப்பையும் குறிப்பிட்டு அவர் பழிசுமத்தவில்லை.

இரசாயன ஆயுதத் தாக்குதல்கள் என்று சந்தேகிக்கப்படும் சம்பவங்களின் பின்னணியில் சிரியாவின் அரசு எதிர்ப்பு கிளர்ச்சிப் படைகளே இருப்பதாக தெஹ்ரான் முன்பு குற்றம்சாட்டியிருந்தது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &