இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகையைக் குறைத்துக்காட்ட அரசு சதி செய்துள்ளது. சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலமே இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது என கிழக்கு மாகாணசபையின் ஐ.தே.க.உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சனத்தொகை, புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள 2012ஆம் ஆண்டு அறிக்கையின் படி கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 64451. இதில் முஸ்லிம்கள் 58447 பேர் எனவும், இலங்கைத் தமிழர் 2522பேர் எனவும், இந்தியத் தமிழர் 3445 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சிங்களவர் 19 பேர் இருப்பதாகவும், இலங்கைச் செட்டிகள் 2 பேர் இருப்பதாகவும், எந்த இனம் என அடையாளம் காண முடியாதோர் 13 பேர் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தியத் தமிழர் எவரும் கிண்ணியாவில் இல்லை. எனினும் 3445பேர் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே சிங்களவர் 19 பேர் இல்லை. செட்டிமார் என யாரும் இல்லை. எந்த இனம் என அடையாளம் காண முடியாதோரும் இல்லை. கிண்ணியாவில் நிரந்தரமாக வசிக்கின்ற, கிண்ணியாவைப் பற்றி நன்கு தெரிந்தோர் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்வர்.
இப்படியான நிலையில் சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம் ஏன் பிழையான தகவலை வெளியிட வேண்டும். இங்கு இந்தியத்தமிழர், செட்டிமார், இனம் அடையாளம் காண முடியாதோர் எனக்குறிப்பிடப்பட்டிருப்ப தெல்லாம் முஸ்லிம்கள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு முஸ்லிம்களின் எண்ணிக்கையை வேறு இனமாகப் பிரித்துக் காட்டுவதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதே அரசின் நோக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வீதத்திலும், இலங்கை முஸ்லிம்களின் வீதத்திலும் தாக்கம் செலுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. முஸ்லிம்களுக்கெதிராக இந்த அரசு செய்து வரும் அநியாயங்களில் மற்றுமொரு வடிவமே இதுவாகும்.
இந்தச் சதி கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ளதா? அல்லது வேறு பிரதேசங்களிலும் செய்யப்பட்டுள்ளதா என்பதை நான் தற்போது ஆராய்ந்து வருகின்றேன். இதனை ஒவ்வொரு பிரதேசத்திலுள்ளோரும் கவனத்தில் எடுக்க வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்தப் புள்ளிவிபர அறிக்கை ஆளுங்கட்சியில் உள்ள சகலருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிகள் யாரும் இது குறித்து வாய் திறக்காமலிருப்பதிலிருந்து அவர்களது அரச விசுவாசம் தெளிவாகின்றது. சமூகத்தை விட அரசைப் பாதுகாக்கும் விடயமே தற்போதைய ஆளுங்கட்சியினருக்கு முக்கியமாக உள்ளது.
எதிர்கால அபிவிருத்திச் செற்பாடுகள், ஒதுக்கீடுகள், வேலைவாய்ப்புகள் என்பவற்றில் இந்தச்சனத்தொகை விகிதாசாரமே பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதால் இது முஸ்லிம்களுக்கு பரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஆரம்பத்திலேயே இதனைத் திருத்திக் கொள்ள எல்லாத்தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் சமூகநலன் கருதி இதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aug 29, 2013
முஸ்லிம்களின் சனத் தொகையை குறைத்துக் காட்ட அரசு சதி
Posted by AliffAlerts on 15:58 in NL | Comments : 0