பம்பலபிட்டி - மிலாகிரிய - டிக்மன் வீதி பகுதியில் பொலிஸாருக்கும் கொள்ளை குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளரது வீட்டில் 5 பேர் கொண்ட குழுவொன்று இன்று (24) அதிகாலை கொள்ளையிடச் சென்றுள்ளது.
இது குறித்து வீட்டார் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது பொலிஸாருக்கும் கொள்ளை குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு கொள்ளையர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நான்கு கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கொள்ளையர்களின் தாக்குதலில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பம்பலபிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(அத தெரண)