வெலிவேரியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பாதுகாப்பு செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே நடத்தப்பட்டது என உயிரிழந்த சிறுவனின் தயார் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பலருடனும் பிரதேசத்தின் குடிநீர் பிரச்சினை குறித்து கலந்துரையாடி மகஜர்கள் கையளிக்கப்பட்டது என்றும் தீர்வு கிடைக்காமையினால் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது ஏன் இராணுவம் வந்தது என்றும் கேள்வி எழுப்பிய அவர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் என்ன? என்றும் வினவினார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை அடுத்து வெலிவேரியா பகுதிக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள்,அமைச்சர்கள் என பலரும் சென்று வருகின்றனர். சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் இருந்த தொழிற்சாலை மூடப்பட்டதுடன் பவுசர்களில் மக்களுக்கு தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படுகின்றது.
பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் கம்பஹா செயலகத்தில் கூட்டம் ஒன்றும் நேற்று நடைபெற்றது. குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.